தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மோசடி - ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் 29 லட்சம் ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக பதிவான வழக்கில் நெல் கொள்முதல் நிலைய அதிகாரி, இடைத்தரகர், அரிசி ஆலை உரிமையாளர் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

By

Published : Jul 2, 2022, 6:17 PM IST

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மோசடி
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மோசடி

சென்னை:வேலூர் மற்றும் திருவண்ணாமலை அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை முறைகேடாக குறைந்த விலையில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து, அரசு கொள்முதல் நிலையத்தில் அதிக விலைக்கு நெல்லை விற்றதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் 29.68 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வேலூர் சரக மேலாளர் புகார் அளித்தார். அதனடிப்படையில் வேலூர் நெல் கொள்முதல் நிலையத்தின் அதிகாரி மகேஷ், இடைத்தரகர் மேகநாதன், அவரது உதவியாளர் ராம்குமார் மற்றும் அரிசி ஆலையின் உரிமையாளர் கங்கா கிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த மே 15ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

அரசாங்கத்தை ஏமாற்றி, அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு வரும் நெல்லை தனியார் அரிசி ஆலைக்கு சட்ட விரோதமாக விற்று, அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நால்வரும், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கைது செய்யப்பட்டுள்ள 4 பேரால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், நெல் கொள்முதல் நிலைய அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் தீவிர பொருளாதாரக் குற்றங்களை தீவிரமாக கருதப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகபடுத்தி, விவசாயம் செய்த நெல்லை சுலபமாக விற்பதற்காகவே நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது என்றும், அதில் முறைகேடுகளில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்கள் நான்கு பேரும் சேர்ந்து வேலூர் சரகத்தில் உள்ள 19 நெல் கொள்முதல் நிலையங்களில் 45 கோடியே 36 லட்சம் ரூபாய் நெல் கொள்முதல் மூலம் 29 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கு கமிஷன் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் அரசு மற்றும் விவசாயிகளுக்கு பெரும் அளவில் வருவாய் இழப்பீடு ஏறப்பட்டுள்ள நிலையில், மனுதார்கள் 4 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:தொழிலதிபர் கடத்தல் வழக்கு; விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் உதவி ஆணையருக்கு சிபிசிஐடி சம்மன்!

ABOUT THE AUTHOR

...view details