பொங்கல் வந்தாச்சு! பஸ் பிடிக்க கோயம்பேடா? கிளாம்பாக்கமா? - மக்கள் கூறுவது என்ன? சென்னை:சென்னை பெருநகரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கி வந்தன. ஆனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வந்து செல்வதால், நகரின் மையப் பகுதியில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், விழாக் காலங்களில் பெருங்களத்தூர் தாம்பரம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை மனதில் கொண்டு, கிளாம்பாக்கத்தில் புதிதாக ஒரு பேருந்து நிலையத்தை உருவாக்கியது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம். அந்த வகையில், வண்டலூருக்கு அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம் 88.52 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
பேருந்து நிலையத்திற்கான பணிகள் முடிவடைந்து டிசம்பர் 30ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். குறிப்பாக இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இதுவரை புறப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள், மாநில விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் முதற்கட்டமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கி இருக்கிறது. மேலும், விரைவிலேயே தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பொதுமக்கள் கிளாம்பாக்கத்திற்கு செல்ல வேண்டும் என்றால், வழித்தடம் 104 என்ற பேருந்து சுழற்சி முறையில் 24 பேருந்துகள் மொத்தம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. மேலும், இந்த பேருந்துகள் கோயம்பேடு, நெற்குன்றம், மதுரவாயல் போரூர் சுங்கச்சாவடி வழியாக தாம்பரம் சென்றடைந்து, பெருங்களத்தூர் வண்டலூர் வழியாக கிளம்பாக்கம் பேருந்து நிலையம் செல்கிறது.
இதற்கு பேருந்து கட்டணமாக அதிகபட்சம் ரூ.37 முதல் 40 ரூபாய் பயணச்சீட்டு வசூலிக்கப்படுகிறது. மேலும் அடுத்த வாரம் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக மக்கள் அதிக அளவு கிளாம்பாக்கத்தை நாடுவார்கள் என்பதால், சென்னையினுடைய மையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு கூடுதல் பேருந்துகளை அரசு இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.
குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல்வேறு வசதிகள் செய்திருந்தாலும் கூட, சென்னையினுடைய மையப்பகுதியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்து, அங்கிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இருக்கிறதா? இல்லையா? என்ற ஒரு குழப்பத்துடனேயே மக்கள் பயணம் செய்வதாகவும், மேலும் இதற்கு முன்பு மிக எளிமையாக இருந்த பயணத்தை தற்பொழுது அரசு கடினமாக்கி உள்ளது என்றும் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், முன்பு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து சென்னையின் பிற பகுதிகளுக்கு செல்வதற்கு மிக எளிமையாக மாநகர பேருந்துகளும் இருந்தன. ஆனால் தற்பொழுது தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து சேர்ந்து, பின்னர் சென்னை மாநகருக்குள் செல்ல வேண்டிய சூழல் இருக்கின்றது.
இது, தங்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ப்ரீபெய்ட் ஆட்டோ ஓட்டுபவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.
ஏனெனில், கோயம்பேடு பேருந்து நிலையத்தை மட்டுமே நம்பி ஆயிரத்து 500 ப்ரீபெய்ட் ஆட்டோக்கள் இயங்கி வருவதாகவும், ஆனால் தற்பொழுது இந்த பேருந்து நிலைய மாற்றத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் மிகுந்த அளவு பாதிப்படைந்து உள்ளதாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு பக்கம் மக்களுக்கான புதிய பேருந்து நிலைய அறிவிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்திருந்தாலும், இதில் உள்ள குளறுபடிகளையும் சிரமங்களையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
எனினும், பல்வேறு வசதிகளுடன் உருவாகியுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆரம்பத்தில் பிராட்வேயிலிருந்த பேருந்து நிலையம் கோயம்பேட்டுக்கு மாற்றப்பட்ட போதும், இதே போன்ற விமர்சனங்கள் எழுந்ததை சுட்டிக்காட்டும் அவர்கள், சிரமம் இருந்தாலும் பெருநகர வாழ்வில் இது போன்ற மாற்றங்கள் தவிர்க்கவியலாதது என கூறுகின்றனர்.
இதையும் படிங்க:போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்.. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?