சென்னை: சன் ஷைன் சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படத்தின் டீசர் கடந்த வருடம் வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வரும் 5ஆம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த அரவிந்தாக்ஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் டீசர் காட்சியில் முதலில் தோன்றும் பெண், தனது பெயர் ஷாலினி உன்னி கிருஷ்ணன் எனவும், தற்போது பாத்திமா பா எனவும், தான் ஒரு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி எனவும், ஆப்கன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னைப் போன்று 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, சிரியா மற்றும் ஏமனில் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மறைக்கப்பட்ட உண்மைகளை அம்பலப்படுத்தும் படம் என பிரகடனமும் செய்யப்பட்டுள்ளது.
இந்த காட்சிகளின் உண்மைத் தன்மையை சரி பார்க்கும்படி, சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர், இந்தியாவில் இருந்து எத்தனை இந்துப் பெண்கள் இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ்ஐ அமைப்புக்கு விற்கப்பட்டுள்ளனர், அதில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த விவரங்களை கோரியபோது, ‘இது மாநில அரசு சம்பந்தப்பட்டது’ என உள்துறை அமைச்சகம் பதிலளித்து.