சீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கோவிட்-19 (கொரோனா வைரஸ்) உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்திவருகிறது. மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும், தலைநகர் டெல்லிக்கே கொரோனா வைரஸ் வந்திறங்கியுள்ளது. இது ஒட்டுமொத்த இந்தியாவை அதிர்ச்சியாக்கியுள்ளது.
மற்றவர்களுக்கும் பரவாமல் இருக்க மருத்துவ, சுகாதார நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. அந்தந்த மாநில அரசுகளும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. அண்டை மாநிலமான தெலங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாட்டிலும் சுகாதாரத் துறை அலுவலர்கள் முழூமூச்சாக இறங்கி வேலைசெய்துவருகின்றனர். இத்தகைய சூழலில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி நமது ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டியளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்தியா முழுவதும் உள்ள 27 விமான நிலையங்களில் சீனா, ஹாங்காங், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள் பரிசோதனை செய்யப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நான்கு விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளிலிருந்து வரும் பயணிகளைப் பரிசோதனை செய்கிறோம். கொரோனா வைரஸ் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களின் ரத்தம் உடனடியாகப் பரிசோதனை செய்யப்படுகிறது.
மேலும் அவர்களை அரசு மருத்துவமனைகளில் தனி வார்டில் வைத்து சிகிச்சையளித்துவருகிறோம். இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். 54 பயணிகளின் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனையில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் இதற்கான தனி வார்டுகள் தொடங்குவதற்கு தலைமைச் செயலர் மூலம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.