கடந்த சில நாட்களாக பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் சென்னை புறநகர் பகுதியில் மழைநீரோடு கழிவுநீரும் கலந்து சாலை எங்கும் தேங்கி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. கொரட்டூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சுமார் 2000 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் குடியிருப்பில் வசிப்பவர்கள் குழந்தைகளோடு உறங்க முடியாமலும், சமைக்க முடியாமலும் உறவினர்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த பகுதியில் ஏற்கனவே யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், வயதானவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளானர். இதனால் சென்னை பெருமாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.