சென்னை :திருவல்லிக்கேணியில் உள்ள நடுக்குப்பத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட பயிற்சி மையத்தை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”இல்லம் தேடி கல்வி திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று(ஜன.03) தொடங்கப்பட்டது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரிய 4 லட்சத்து 93 ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.
அவர்களை கண்டறிந்து தகுதியானவர்களை தேர்வு செய்துள்ளோம். கரோனா தொற்று காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் கல்வி பயிலாமல் உள்ளனர். எனவே இல்லம் தேடி கல்வித் திட்டம் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மையங்கள் இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்காக தேவைப்படுகின்றன.