சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ள நிலையில், இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நிர்வாகம் மற்றும் மீட்பு பணிகளுக்காக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகளவு மழை இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மக்களுக்கு குடிநீருக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஆகிய ஏரிகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
குறிப்பாக அடையாறு வழித்தடத்தில் செல்லக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் 6 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்டு, அதன்பிறகு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, புழல் ஏரி மற்றும் பூண்டி ஏரியிலும் உபரி நீர் திறந்துவிடப்பட்டு, தற்போது குறைக்கப்பட்டுள்ளது. ஏரிகளில் நீர் வரத்து அதிமாகும்பட்சத்தில் திறந்துவிடப்படும் உபரி நீர் அளவு அதிகமாக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கபட்டு உள்ளது.
இந்நிலையில், அடையாறு வழித்தடம் மற்றும் கூவம் வழிதடத்தில் உபரி நீர் அதிகமாக திறந்துவிடப்பட்டதன் காரணமாக, ஆற்றில் இந்நாள் வரை தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் அகற்றப்படாமல் இருந்த ஆகாயத் தாமரை செடிகள் அனைத்தும் கடலில் கலந்துள்ளன.
மேலும், இன்று (நவ. 2) காலை முதல் கடற்பரப்பின் மேல் காற்றின் வேகம் அதிகமானதன் காரணமாக, கடல் அலையின் சீற்றமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் கடலில் கலந்திருந்த குப்பைகள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகள் அனைத்தும் டன் கணக்கில் கரை ஒதுங்கியுள்ளன.
இதனால், சென்னை மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு வரும் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய சுற்றுலா தலமாக விளங்கக் கூடிய மெரினா கடற்கரை, தற்போது காண்பதற்கே அறுவறுப்பான இடமாக காட்சியளிக்கிறது. இதனால் முடிந்தவரையில் மழைக்கு முன்னரே மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.