சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை (டிச 22) அதிகாலை முதல் காலை 7 மணி வரையும், காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், இரவு 7 மணி முதல் கடைசி ரயில் சேவை இயக்கப்படும் வரையும் பொதுமக்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
“பீக் ஹவர்” (peak hour) என்று அழைக்கப்படும் கூட்டம் நிறைந்த நேரமான காலை 7 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை ஆகிய நேரங்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி கிடையாது, அந்த நேரத்தில் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு வருவதிலிருந்து தொடர்ந்து சென்னை புறநகர் ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது 410 ரயில்கள், அதாவது 65 விழுக்காடு ரயில்கள் இயக்கப்படுவதாக அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சென்னை புறநகர் ரயில்களில் அரசுப் பணியாளர்கள், மருத்துவம், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது, பின்னர் பெண்களுக்கும், 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:ஹால் டிக்கெட் பெற ஆதார் இணைப்பு கட்டாயம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு