தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடிகால் வசதி கோரி அம்பத்தூரில் சாலை மறியல் செய்த பொதுமக்கள் - சாலை மறியல் செய்த பொதுமக்கள்

சென்னை: முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தரக்கோரி அம்பத்தூர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

public blocked the road in Ambattur demanding drainage facilities
public blocked the road in Ambattur demanding drainage facilities

By

Published : Aug 2, 2020, 12:07 AM IST

சென்னை அம்பத்தூர் மண்டலம் 82ஆவது வார்டுக்கு உள்பட்ட மேனாம்பேடு பகுதியில் பிள்ளையார் கோயில் தெரு, கைலாசம் தெரு, ஏகாம்பரம் தெரு, பிள்ளையார் கோயில் 2ஆவது தெரு ஆகியவை உள்ளன. இங்கு 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர்.

மேற்கண்ட பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லை என்பதால், சிறுமழை பெய்தால்கூட தண்ணீர் செல்ல முடியாமல் வீடுகளைச் சூழ்ந்து கழிவுநீருடன் சேர்ந்து மழைநீரும் தேங்கி நிற்கும். இதனால் மழைக்காலத்தில் குடியிருப்புவாசிகள் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் புகாரளித்தும், மாநகராட்சி அலுவலர்கள் இதுவரை எந்தவித நிரந்தர தீர்வும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இதற்கிடையில், கடந்த சில தினங்களாக அம்பத்தூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து மேனாம்பேடு பகுதிகளில் குடியிருப்புகளைச் சூழ்ந்து மழை நீரும், கழிவு நீரும் தேங்கி நின்றன.

இதுகுறித்து பொதுமக்கள் மண்டல அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை மேனாம்பேடு சர்வீஸ் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

வடிகால் வசதி கோரி அம்பத்தூரில் சாலை மறியல் செய்த பொதுமக்கள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசன், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களைக் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினார். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாததால், காவல் துறையினருக்கும் மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் காவல் துறையினர் இளைஞர்கள் சிலரைக் கைது செய்தனர். இதனைக் கண்டித்து பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பியதால், பரபரப்பு இன்னும் அதிகமாகியது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் மண்டல செயற்பொறியாளர் சதீஷ்குமார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கழிவுநீரும், மழைநீரும் செல்ல தகுந்த ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:புதிய கல்விக் கொள்கை: 'நடைமுறைப்படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்'

ABOUT THE AUTHOR

...view details