சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த சதாம் உசேன், கடந்த ஜூன் 29ஆம் தேதி அருகில் உள்ள மருந்தகத்திற்கு சில மாத்திரைகள் வாங்க தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணன், இரு சக்கர வாகனத்தில் வெளியில் வரக்கூடாது எனத் தெரிவித்து வாகனத்தை பறிமுதல் செய்துள்ளார்.
மேலும், காவலரிடம் "மாத்திரைகள் வாங்குவதற்காகவும் வெளியில் வரக்கூடாதா?" எனக் கேள்வி எழுப்பிய சதாம் உசேனை, 50க்கும் மேற்பட்ட காவலர்கள் வலுக்கட்டாயமாக காவல் ரோந்து வாகனத்தில் ஏற்றுவதை பொது மக்கள் படம் பிடித்து வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், இது குறித்து செய்தித்தாள்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவர் துரை. ஜெயச்சந்திரன் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ”சதாம் உசேன் மீது ஊரடங்கை மீறியதற்கான நடவடிக்கை எடுக்காமல் ஏன் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றார்கள்? தவறிழைத்த காவலர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? உடனடியாக சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தகுந்த உத்தரவை சென்னை காவல்துறை ஆணையர் பிறப்பிக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து நான்கு வாரங்களில் காவல் ஆணையர் விரிவாக பதிலளிக்கவேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.