சென்னை:யூ-ட்யூப்பில் பப்ஜி விளையாட்டை ஒளிபரப்பிக் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டியவர் தான், மதன்.
இவர் மதன், டாக்ஸிக் மதன் 18+, பப்ஜி மதன் உள்ளிட்ட நான்கு யூ-ட்யூப் சேனல்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மதன் என்ற சேனலில் மட்டுமே அதிகப்படியான 7 லட்சம் பார்வையாளர்களும், இதர சேனல்களில் 2 லட்சம் பார்வையாளர்களும் இருந்து வந்தன.
இந்நிலையில், தொடர்ந்து பெண்கள் குறித்து இழிவாகப் பேசி சேனலில் வீடியோ வெளியிட்டு வந்த மதன் மீது கண்டனங்கள் கிளம்பின.
இதனையடுத்து மதன் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்குப் புகார்கள் வந்தது. புகாரின் அடிப்படையில் மதன் மீது இழிவாகப் பேசுதல் உள்பட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தேடி வந்தனர்.
நீண்ட நாள்களாக விபிஎன் (VPN) என்னும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, தலைமறைவாக இருந்த மதனை தர்மபுரியில் வைத்து ஜுன் 18ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கு முன்பு மதனின் மனைவியான கிருத்திகாவிடம் விசாரித்தபோது, கிருத்திகா தான் அந்த யூ-ட்யூப் சேனலுக்கு அட்மினாக இருந்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து கிருத்திகாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மதனின் யூ-ட்யூப் சேனலை முடக்கக்கோரி யூ-ட்யூப் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் காவல் துறையினர் பரிந்துரை கடிதம் அனுப்பியிருந்தனர்.
முடக்கப்பட்ட மதன் யூ-ட்யூப் சேனல் இந்நிலையில், 7 லட்சம் பார்வையாளர்களைக் கொண்ட மதனின் சேனலை யூ-ட்யூப் நிறுவனம் முடக்கியுள்ளது. முதற்கட்டமாக மதன், பப்ஜி மதன் என்ற இரு சேனல்களை முடக்கியுள்ளது.
மீதமுள்ள இரு சேனலையும் முடக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதன் அவரது மனைவி கிருத்திகாவை ஒரே நாளில் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பப்ஜி மதனிடம் பணத்தை இழந்தீர்களா? புகாரளிக்க இமெயில் ஐடி வெளியீடு