கடந்த மே 21ஆம் தேதி தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் காணொலிக் காட்சி வழியாகப் பேசிய, அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் ரெவ் ஜெஸ்ஸி ஜாக்சன், கரோனாவுக்கு எதிரான போரில் தமிழ்நாட்டுக்கு உதவ உறுதியளித்தார்.
வெளிநாடுகளுக்கு எட்டு கோடி தடுப்பூசிகளை வழங்கி உதவ அமெரிக்கா முன்வந்துள்ள நிலையில், இந்தியாவுக்கு ஆஸ்ட்ராஜென்கா தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்வதை விரைந்து உறுதி செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கோரிக்கை விடுக்குமாறு, பழனிவேல் தியாகராஜன் முன்னதாக ரெவ் ஜெஸ்ஸி ஜாக்சனிடம் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், தற்போது இது குறித்து ட்வீட் செய்துள்ள நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ”அமெரிக்காவில் அதிகமாக இருப்பிலுள்ள ஆஸ்ட்ராஜென்கா தடுப்பூசிகளை இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் அதிக அளவில் ஒதுக்குமாறும், எங்கள் தடுப்பூசி ஏலத்தில் பங்கேற்க உலகளாவிய மருந்து நிறுவனங்களை ஊக்குவிக்குமாறும் ரெவ் ஜெஸ்ஸி ஜாக்சனைக் கேட்டுக்கொண்டோம்.
கரோனா தொற்றின் இரண்டாவது அலையினைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு போராடிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டுக்கு அப்பால் நான் நிதி மற்றும் ஆதரவைத் திரட்டுகிறேன். மனித உரிமைக்காக அயராது போரிடும் வாழும் வரலாறு ரெவ் ஜெஸ்ஸி ஜாக்சன், தனது வாழ்த்துகளை முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தெரிவித்தார். மிக்க நன்றி” எனக் குறிப்பிட்டு காணொலிக் காட்சி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், ”முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே... நீங்கள் சிறந்த தலைவர். உங்களை நோக்கி உதவி வந்து கொண்டிருக்கிறது. விடியல் விரைவில் வர இருக்கிறது. மன உறுதியோடு செயல்படுங்கள்” என ரெவ் ஜெஸ்ஸி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.