சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.28) காங்கிரஸ் கட்சியின் குழு தலைவர் செல்வபெருந்தகை பேசுகையில், "நேற்று நடந்த முதலமைச்சர்கள்-பிரதமர் கூட்டத்தில் ஒரு சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்காததால் தான் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியவில்லை என பிரதமர் மோடி பேசியுள்ளதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே இருந்தது" எனக் கூறி கவன ஈர்ப்பு கொண்டுவந்து பேசினார்.
இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசியதை தொடர்ந்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த ஆண்டுகளில் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி சுமார் 50% வரி அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசின் வரி 300% அதிகரித்துள்ளது. எந்த மாநிலமும் வரியை குறைக்கவில்லை என்று கூறுவது தவறு.
முன்பு 60 பைசா, தற்போது 35 பைசா:மாநில நிதியில் செலவு செய்து கட்டப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில், ஒன்றிய அரசின் தேர்வை எழுதி படிக்கவேண்டும் என்று கூறுவது தான் கூட்டாட்சித் தத்துவமா? ஒன்றிய அரசு அறிவுறுத்தலுக்கு முன்பே தமிழ்நாட்டில், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது. இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைந்தது. கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான வரியை 200 சதவீதமும் டீசல் மீதான வரியை 500 சதவீதமும் ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது.