தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 77 நபர்களுக்கு மனநோய்! - சிறைக் கைதிகளுக்கு மனநோய்

சென்னை: தமிழ்நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும்  14 ஆயிரத்து 707 பேரில் 77 நபர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய குற்றப்பதிவு ஏடுகள் பணியகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.

சிறைத்துறை
சிறைத்துறை

By

Published : Sep 4, 2020, 8:54 AM IST

இந்தியச் சிறைகளின் 2019 நிலவரம் குறித்த புள்ளிவிவரம் ஒன்றை உள் துறை அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய குற்றப் பதிவேடுகள் பணியகம் அண்மையில் வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்நாட்டுச் சிறைகளின் நிலவரம் குறித்த பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தமிழ்நாடு சிறைகளில் 14 ஆயிரத்து 707 பேர் உள்ளனர். அவர்களில் 77 நபர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தப் புள்ளிவிவர அறிக்கையில், தற்போது சிறையில் உள்ள நபர்களில் 13 ஆயிரத்து 964 பேர் ஆண்கள் 743 பேர் பெண்களாவர். சிறையில் உள்ள மொத்த நபர்களில் 195 பேர் முதுநிலைப் பட்டதாரிகள், 1,278 பட்டதாரிகள், பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அறிவு பெற்றவர்கள் 640 பேர், 10 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்றவர்கள் 2955 பேர், பத்தாம் வகுப்புக்கு கீழ் படித்தவர்கள் 5 ஆயிரத்து 286 பேர், கல்வியறிவற்றோர் நான்காயிரத்து 353 பேராவர்.

அவர்களில் மொத்தம் 11 ஆயிரத்து 495 பேர் இந்துக்கள், 1,617 பேர் இஸ்லாமியர்கள், 1,594 பேர் கிறிஸ்தவர்கள், ஒரே ஒரு சீக்கியர் உள்பட சிறைகளில் தண்டனை அனுபவித்துவருகின்றனர்.

ஆப்பிரிக்கர்கள் ஏழு பேர், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் 16 பேர், நேபாளிகள் ஏழு பேர் பாகிஸ்தானி ஒருவர், இலங்கையைச் சேர்ந்தவர்கள் 55 பேர் உள்பட 119 வெளிநாட்டினர் தமிழ்நாட்டுச் சிறைகளில் உள்ளனர்.

சிறை கைதிகள் உற்பத்திசெய்யும் பொருள்களை விற்பனைசெய்யும் மாநிலங்களில் தெலங்கானா ரூ.599.99 கோடியும், தமிழ்நாடு ரூ.72.96 கோடியும் விற்பனை செய்து தேசிய அளவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளதாக அப்புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்திய அளவில் 1,350 சிறைகள் உள்ளன. தமிழ்நாடு 141 சிறைகளுடன் மாநில அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேபோன்று இந்தியாவில் 617 கிளைச் சிறைகள் உள்ளன. தமிழ்நாடு 96 கிளைச் சிறைகளைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாடு சிறைகளில் 23 ஆயிரத்து 392 பேரை அடைக்கும் வசதி இருந்தாலும் தற்போது 14 ஆயிரத்து 707 பேரை மட்டுமே அடைத்து மொத்த சிறை வசதியில் 62.9 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தி உள்ளது எனவும் அப்புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details