வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளியில் படித்த மாணவிகள் அளித்தப் பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழ்நாடு காவல் துறையினர் இன்று(மே 24) கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
முன்னதாக பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளியில் "பல கறுப்பு புள்ளிகள்" உள்ளதாக விசாரணையில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இதேபோன்று பன்னிரெண்டாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் அவர் ஈடுபட்டு வந்துள்ளதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவிகளின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு வாட்ஸ்அப் மூலமாக அவர்களுடன் சேட் செய்வது, மாணவிகளின் அந்தரங்க புகைப்படத்தை அனுப்பச் சொல்வது போன்ற வேலைகளில் அவர் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.
வணிகவியல் (காமர்ஸ் & ஆக்கவுண்டன்ஸி) பாடத்தில் மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக கடந்த 27 ஆண்டுகள் பத்மசேஷாத்திரி பள்ளியில் வேலை பார்த்து வருகிறார், ராஜகோபாலன்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், உஷாரான ராஜகோபாலன் தன்னுடைய செல்போனில் உள்ள ஏராளமான மாணவிகளின் அந்தரங்க புகைப்படம், அவர்களுடன் பேசிய அந்தரங்க செய்திகள் ஆகியவற்றை டெலிட் செய்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆதாரங்கள் கிடைத்த நிலையில், ராஜகோபாலன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பிரபல இசையமைப்பாளர் அனிருத் உள்பட பல துறைகளில் உள்ள பிரபலங்கள் பலர் ராஜகோபாலனின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.