நேற்று இணையவழியில் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பி.ஆர்.பாண்டியன், "மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறவேண்டுமென்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மசோதாக்களின் மூலம் விவசாயிகளுக்கு பல அதிகாரங்கள் கிடைக்கும் எனவும், விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும் எனவும் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் பிரதமர்.
இச்சட்டத்தால் வருகிற ஆண்டில் தமிழ்நாடு அரசு நெல் கொள்முதலையே கைவிடும் அளவிற்கு நெருக்கடி ஏற்படும். இதை தமிழ்நாடு முதலமைச்சர் ஆதரிப்பது நியாயமற்றது. அதனால் உடனடியாக இந்த மசோதாவை திரும்பப் பெற தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும். அக்டோபர் 2ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் நடக்கவிருக்கும் கிராம சபைக் கூட்டங்களில் இந்த மசோதாக்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும். இதை மத்திய, மாநில அரசுகள் அங்கீகரிக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடியும், குருவை சாகுபடியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.