இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மருத்துவர் பிரதீபா இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இறப்பிற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். அவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள், மருத்துவர்களின், பணிச்சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு தொடர்ச்சியாக 6 மணி் நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும்.
தொடர்ச்சியாக 12 மணி நேரம், 24 மணி நேர பணிகள் வழங்குவதை கைவிட வேண்டும். கரோனா மற்றும் கரோனா அல்லாத சிகிச்சைப் பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவக் குழுவினருக்கு தொடர்ந்து 7 நாள்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும். ஏழு நாள்கள் பணி முடிவடைந்த பிறகு 14 நாள்கள் தனித்திருக்க உத்தரவிட வேண்டும். தமிழ்நாட்டில் 95 விழுக்காடு பேர் கோவிட் 19 நோயின் அறிகுறிகள் இல்லாமல் உள்ளனர்.
எனவே, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரக்கூடிய அனைவருக்குமே கரோனா தொற்று இருக்கலாம் என்ற அடிப்படையில் சிகிச்சை வழங்க வேண்டியுள்ளது. கரோனா மற்றும் கரோனா அல்லாத சிகிச்சைப் பிரிவுகளிலும், பணியாற்றும் மருத்துவக் குழுவினருக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், பாதுகாப்பு கவசங்களை வழங்க வேண்டும். கரோனா நோயாளிகளுடன் தொடர்பு ஏற்பட்ட மருத்துவக் குழுவினரை 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும்.