சென்னை: அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளனம் மற்றும் மத்திய அரசின் மகா சம்மேளனம் இணைந்து சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று மாநில மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் புதிய பென்சன் திட்டத்தை முறியடிப்போம்; பழைய பென்சனை வென்றெடுப்போம் என தட்சிண ரயில்வே பென்சனர்ஸ் யூனியன் தலைவர் இளங்கோவன் எழுதிய புத்தகத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அன்பரசு வெளியிட, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலளார் ஆர்.பி.சுரேஷ் பெற்றுக்காெண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச்செயலளார் ஆர்.பி.சுரேஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பிஎப் ஆர்டிஏ ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும்.
மத்திய, மாநில அரசில் உள்ள 60 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை வரையறுக்கப்பட்ட ஊதியத்தில் வழங்க வேண்டும். மத்திய, மாநில தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகும் வகையில் செய்த சட்டங்களின் உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய, மாநில அரசு, தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கக் கூடிய ஒப்பந்த முறை நியமனமாக அத்தக்கூலி அடிமைமுறையை தடுத்து நிறுத்த வேண்டும்.
இது நிறைவேற்றப்படவில்லையெனில் வரும் காலங்களில் செப்டம்பர் 23-ல் இந்திய நாட்டின் நாடாளுமன்றத்தை நோக்கி தர்ணா போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். அத்தக்கூலி முறையை ரத்து செய்ய வேண்டும். நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடர்ச்சியாக நடத்தப்படும்.
2013-ல் செப்டம்பர் 3-ல் இந்த சட்டம் வந்ததில் இருந்து மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். 2024-க்குள் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்யவில்லை என்றால், பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளோம். இந்தப் போராட்டங்களில் ரயில்வேயும் எங்களுடன் இணைந்து செயல்பட உள்ளனர். இதனால் நாடு ஸ்தம்பிக்கும் அளவுக்கு அரசு ஊழியர்கள் போராட்டம் நடைபெறும்.