தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், கூடுதலாக மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுவருகின்றன. ஆனால், கடந்த ஒரு வருடமாகப் பணியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் பயிற்சி முடித்து சுமார் ஆயிரத்து 500 பேர் வெளியே செல்வதால் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.
இதனை சமாளிப்பதற்காக பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து பணிபுரிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு பயிற்சி மருத்துவர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கூறியுள்ளதாவது,
”தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் 2015ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்து மார்ச் 29ல் ஓராண்டு பயிற்சி முடித்த பயிற்சி மருத்துவர்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படும் என்று உறுதியளித்து, ஒரு அறிவிப்பை மார்ச் 26 அன்று வெளியிட்டது. ஆனால் மார்ச் 30 மருத்துவ கல்வி இயக்குநரகம் சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தற்போது ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி முதல் இறுதியாண்டு தேர்வு எழுத இருக்கின்றனர். அவர்கள் தேர்வு முடிந்து, தேர்வு முடிவுகள் வெளியாகி பயிற்சி மருத்துவராக சேரும் வரை,2020 மார்ச் 29 முதல் 2021 மார்ச் 28வரை ஓராண்டு பயிற்சி முடித்த பயிற்சி மருத்துவர்களுக்கு பணி நீட்டிப்பு காலவரையின்றி செய்யப்பட்டுள்ளது என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.