சென்னை:சென்னை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோருடன் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்று (ஜூன் 9) ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்கனவே, ஜூன் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட போராட்டத்திற்கான கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மேலும், அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர் இல்லாமல் இருப்பதால் மாணவர்களை பெற்றோர்கள் நம்பிக்கையுடன் சேர்க்க முன் வரவில்லை என்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் போதுமான அளவிற்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில், நேற்று பள்ளிக் கல்வி இயக்குநருடன் இந்தக் குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அத்தோடு தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது இல்லை என்பதைத் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவித்து பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு என்பதை நிலை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.