சென்னை: திரிபுராவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்க சென்ற முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்காரை தடுத்து நிறுத்தி கலவரம் செய்த பாஜகவினரை கண்டித்து, இடதுசாரி கட்சிகளின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் தொல். திருமாவளவன், திமுக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மனித உரிமை கூட்டமைப்பின் பேராசிரியர் அ.மார்க்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வன்முறை அரசியல்
இந்நிகழ்ச்சியில் தலைமையேற்று பேசிய கே.பாலகிருஷ்ணன், "திரிபுராவில் பொய்களைக் கூறி ஆட்சியைப் பிடித்த பாஜக, தற்போது அங்கு வன்முறையைக் கட்டவிழ்க்கிறது. திரிபுராவில் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த 21 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அம்மாநிலத்தை வன்முறை அரசியலுக்கு சோதனை களமாக பாஜக மாற்றி வருகிறது. ஜனநாயக அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்திய அரசியலில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இடமிருக்காது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்" என கூறினார்.
சரிவை சந்திப்பதால் வன்முறை
இவரைத் தொடர்ந்து பேசிய முத்தரசன், "மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களுக்கு எதிராக சட்டங்களை இயற்றி வருகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் செப்டம்பர் 27ஆம் தேதி நாடு தழுவிய கடை அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டும்.
இதனை வெறும் திரிபுராவில் நடைபெறும் பிரச்சினையாக மட்டும் பார்க்கக்கூடாது. பாஜகவினர் எங்கு வேண்டுமானாலும் நடத்துவார்கள். இந்த வன்முறையை அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம். வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை இருந்தாலும் அதனையும் எதிர்கொள்ள தயார்.
பாஜக ஆர்.எஸ்.எஸ். சரிவை சந்தித்து வருகிறது. இதனால்தான் வன்முறையை கையில் எடுத்துள்ளது. நாட்டிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் ஒரே மேடையில் எதிர்க்கட்சிகள் திரண்டு உள்ளன. இதேபோல், பாஜகவை எதிர்ப்பதில் நாட்டுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு அமைய வேண்டும்" என்று தெரிவித்தார்.
பாஜகவினரை கண்டித்து இடதுசாரி கட்சிகளின் சார்பில் போராட்டம் தெருக்கோடியில் தீ வைக்கப்பட்டால் நம் வீட்டுக்கும் வரும்
இவரையடுத்து பேசிய திராவிடர் கழக்த் தலைவர் கி.வீரமணி, “கரோனவைவிட கொடியவர்கள் மதவாதிகள். இது போன்ற வன்முறைகளுக்கு இடம் கொடுத்தால் ஜனநாயகம் பாதிக்கப்படும், பாசிசம் நாட்டை ஆளும் நிலை ஏற்படும். எங்கோ திரிபுராவில் தான் நடைபெறுகிறது என நாம் இருந்துவிட முடியாது.
தெருக்கோடியில் தீ வைக்கப்பட்டால் அது நம் வீட்டுக்கும் வரும் என்பதை உணர வேண்டும். 20 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த மாணிக் சர்க்காரை அவரது தொகுதிக்கே செல்லவிடாத அளவுக்கு அராஜகத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது.
பாஜகவுக்கு எதிரான இந்த அணி மக்களவை தேர்தல் தொடங்கி, நாளைய ஊராட்சி தேர்தல் வரை தொடரும். லட்சியங்களால் கட்டப்பட்டுள்ள அணி இது. யாரும் அசைத்து பார்க்க முடியாது. மிருகங்களை எப்படி பழக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் இந்த மேடையில் உள்ளவர்கள்.
இந்துத்துவத்தை இராணுவமயமாக்கு, ராணுவத்தை இந்துமயமாக்கு. இதுதான் அவர்களின் நோக்கம். அது தமிழகத்தில் எடுபடாது. இது பெரியார் மண். பெரியார் மண்ணில் உங்கள் வித்தைகள் நடக்காது. வன்முறையை தவிர்த்து எல்லா மக்களை ஒன்றுபடுத்துவோம்” என்று கூறினார்.
வன்முறை வெறியாட்டம்
பின்னர் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், “திரிபுராவில் பாஜக நிகழ்த்தும் வன்முறைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கொள்கை பகையாகதான் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளை இடதுசாரிகள் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி இல்லாமல் வன்முறை வெறியாட்டத்தை கையிலெடுக்கிறார்கள் இப்படிப்பட்ட சூழலில் தான் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கிறது.
எந்த காலத்திலும் எந்த சூழலிலும் பாஜகவோடு கூட்டணி வைக்க கூடாது என்று கொள்கை முடிவோடு செயல்பட்டு வருகிறது இடதுசாரிகளும் விடுதலை சிறுத்தைகளும். ஒட்டுமொத்த தேசத்தையும் இந்து தேசமாக மாற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் யுக்தி, அதில் அவர்கள் ஒருபடி மேலே போகிறார்கள் என்பதை திரிபுரா கலவரம் நமக்கு காட்டுகிறது.
மத அரசியலை முன்னெடுக்கும் பாஜக
பாஜகவின் முதல் எதிரி கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். இடதுசாரி கட்சிகளை அழிக்க வேண்டும் என சங் பரிவார் அமைப்புகள் நினைக்கின்றன. தமிழ்நாட்டில் அவர்கள் கால் ஊன்ற முடியாது என்றாலும் தற்போது ஒன்றிரண்டு இடங்களில் கால் பதித்து வருகின்றனர்.
சந்தர்ப்பவாத அதிமுக, பாமகவால் அவர்கள் தமிழ்நாட்டில் சில சட்டப்பேரவை உறுப்பினர்களை பெற்று இருக்கிறார்கள். இந்து என்ற சொல்லில் சிறுபான்மை இன மக்களை சாதி அடிப்படையில் ஒன்று திரட்டி மத அரசியலை முன்னெடுக்கிறார்கள். சாதிகளை வளர்ப்பதன் மூலம் இந்து உணர்வை எழுப்பலாம் என அவர்கள் நினைக்கிறார்கள்.
இது திரிபுரா பிரச்சினை, கம்யூனிஸ்ட் பிரச்சினை என ஒதுங்கி இருக்க முடியாது. 2024 தேர்தலுக்கு முன் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்கும் பொறுப்பு இடது சாரிகள் இடம் உள்ளது. 2024இல் பாஜகவை வீழ்த்துவதில் இடதுசாரிகளுக்கு மிகப்பெரிய பங்குள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ் மொழிப்பாடம் கட்டாயம்... டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய விதிகள் அறிமுகம்!