தமிழ்நாட்டு மக்களின் வேலைவாய்ப்புகளை பாதுகாக்கும் வகையிலும், வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்கும் வகையிலும் ”தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டு மக்களுக்கே” எனும் ட்விட்டர் பரப்புரையை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், நேற்று (ஆக. 23) மேற்கொண்டார்.
அதில், இன்று (ஆக. 24) இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தலைமையில், அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமையகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வன்னியரசு, ”தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணிகளிலும், தனியார் துறைகளிலும் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு 90 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மாநிலம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வாசல் இருப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் பணிகளில், சிறு, குறு தொழிற்சாலைகளில் உள்ள வேலைவாய்ப்பை தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கே வழங்க வேண்டும் என விசிக கோரிக்கை வைக்கிறது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது தேசிய இனங்களின் வளர்ச்சிக்காக கல்வி வேலைவாய்ப்பில் 90 சதவிகித வாய்ப்பை உருவாக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது.
ஆனால், தற்போது மத்திய பாஜக அரசு ஒரே நாடு - ஒரே சட்டம் - ஒரே கல்வி என தனித்த அடையாளங்களை அழிக்கும் வேலையை தொடர்ச்சியாக செய்து வருகிறது. எனவே உடனடியாக நமது அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்ய, தமிழ்நாடு அரசு, இங்குள்ள வேலைவாய்ப்புகளை மண்ணின் மைந்தர்களுக்கு வழங்க வேண்டும்.
ஏற்கனவே மத்திய அரசுத் துறைகளிலும், தனியார் துறைகளிலும் பணியில் உள்ள வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும். எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநில மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இந்த நடைமுறை ஏற்படுத்தப்பட்டது.
இந்தக் கோரிக்கை, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும். தமிழ்நாடு அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க :சாதிக்கான தலைவரல்ல;தமிழ் சமூகத்திற்கான தலைவர் திருமா!