தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் - கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் - black badge

ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் சென்னையில் இன்று பள்ளிக்குச் சென்று எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்றக் கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

By

Published : Mar 23, 2023, 2:59 PM IST

ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் - கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

சென்னை:எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டாட்டத்தின்போது தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவரை ஆசிரியர் அடித்ததாக கூறப்பட்டு, அதனைத் தொடர்ந்து மாணவரின் பெற்றோர்கள் ஆசிரியர்களை தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக வெளியாகி கடும் விமர்சனத்தை உருவாக்கியது. அதன் அடிப்படையில் காவல் துறையினர் சம்பந்தப்பட்டவர்களின் மீது விசாரணை மேற்கொண்டு ஆசிரியரைத் தாக்கிய 3 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்திற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரோனா தொற்றுக்குப் பின்னர், மாணவர்களிடம் ஒழுக்கம் குறைந்து அவர்களை பள்ளிக்கு வர வைத்து பாடம் நடத்துவதில் சிரமம் இருப்பதாக கல்வித்துறை தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளியின் வகுப்பறையில் புகுந்து, மாணவரின் பெற்றோர் ஆசிரியர்களைத் தாக்கிய நிகழ்வு அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறும்போது, ''தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஒன்றியம் கீழ நம்பியாபுரம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் மீதான வன்முறைத் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

கீழ நம்பியாபுரம் பள்ளியில் இரண்டாம் வகுப்பு ஆசிரியர்கள் மீதான பெற்றோர்களின் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. ஆங்காங்கே மாணவர்கள் ஆசிரியர்கள் மீது தாக்குவதும் பள்ளியின் பொருள்களைச் சேதப்படுத்துவதும் நடந்து கொண்டிருந்த நிகழ்வு தற்போது தொடர் நிகழ்வாக மாறியுள்ளது.

ஏழை எளிய மக்களின் கல்வி நலனை உயர்த்த பாடுபட்டு வரும் ஆசிரியர் சமூகத்தின் மீது வன்முறையாளர்களைப் போல நடத்தப்படும் இந்த கொடூரத் தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. ஆசிரியர்கள், குழந்தைகளை ஒருவேளை அடித்ததாக இருந்தாலும் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டியதை விடுத்து, பள்ளிக்குள் நுழைந்து சிறு குழந்தைகள் முன்னிலையில் ஆசிரியர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலை ஒருபோதும் அனுமதிக்க இயலாது.

ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு இல்லை. மருத்துவர்களைப் போல் பணிப் பாதுகாப்புச் சட்டம் ஆசிரியர்களுக்கும் இயற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். ஆசிரியர்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதல், நடத்திய சிவலிங்கம், அவரது மனைவி, மனைவியின் தந்தை முனியசாமி மீது பிணையில் வெளிவர இயலாத வகையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் இனியும் தமிழ்நாட்டில் நடைபெறாத வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்ற நிகழ்வுகள் இனியும் தொடருமானால் சட்டரீதியான போராட்டத்தையும் களப் போராட்டத்தையும் நடத்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தயங்காது. பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கான சட்டப் பாதுகாப்பையும் பணிப் பாதுகாப்பையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன், தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஒன்றியம், கீழ நம்பியாபுரம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களை கண்மூடித்தனமாக தாக்கிய செயலைக் கண்டிக்கும் வகையில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக சட்டமன்றத்தில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தினை கொண்டு வர வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:போலி லிங்குகள் மூலம் மோசடி செய்த பணத்தை, மீட்டு ஒப்படைத்த தூத்துக்குடி சைபர் க்ரைம் போலீசார்

ABOUT THE AUTHOR

...view details