சென்னை:2019ம் ஆண்டு மக்களவை தேர்தலை முன்னிட்டு, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து, அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். கறுப்புக் கொடியுடன் பங்கேற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், பிரதமர் மோடி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, "ராகுல் காந்தி அனைவருக்கும் பேச கற்றுக் கொடுத்திருக்கிறார். காங்கிரஸ் எப்போதும் அரசியல் ரீதியாக தவறு செய்தது கிடையாது. பிரதமர் மோடியை கேள்வி கேட்டால் தவறா? எந்த வெளிநாட்டில் இந்தியாவை தரம் தாழ்த்தி பேசி உள்ளார்? நாம் மேற்கொள்ளும் பரப்புரையை பொறுத்து தான் வெற்றி அமையும். அதன் போக்கில் நடக்காது.
காங்கிரஸ் கட்சி ஒரு போதும் தனி நபருக்கு எதிரானது அல்ல. ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் போராட்டம். காங்கிரஸ் வந்த பின் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. இதை மக்கள் மறந்துவிட விடக்கூடாது. இது தனி மனிதருக்கு எதிரான போராட்டம் அல்ல. தவறான கொள்கைக்கு எதிரான போராட்டம்.போராட்டம் மென்மையாக இருந்தாலும், அழுத்தமாக, உறுதியாக இருக்கும். அப்போது தான் மக்கள் மனதில் இருக்கும்.
தமிழக அரசு சிந்திப்பதற்கு மாறாக, காவல்துறை சிந்திக்கிறது. காவல் துறை இவ்வளவு கடுமை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. சாவர்க்கர் அந்தமானில் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு வெளியில் வந்தார். ராகுல் காந்தி உண்மையை பேசுகிறார். எதையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரம் அவருக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் ஜனநாயக போராட்டம் செய்ய அனுமதி இல்லையா? இந்த கூட்டம் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் கூடிய கூட்டம். ஆனால் அண்ணாமலை எத்தனை லட்சம் செலவு செய்து பிரதமரை வரவேற்கிறார்?" என்றார்.
போராட்டம் முடிந்த பின், சாலை மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோடம்பாக்கத்தில் உள்ள சமுதாய கூடத்தில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: "டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் விலக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" - அமைச்சர் தங்கம் தென்னரசு