தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவர்களுக்கான கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தாததைக் கண்டித்து போராட்டம் - உண்ணாவிரத போராட்டம்

மருத்துவர்களுக்கான கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தாததைக்கண்டித்து வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் குடும்பத்துடன் சென்னையில் உண்ணாவிரதப்போராட்டம் செய்ய இருப்பதாக அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த பெருமாள் பிள்ளை
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த பெருமாள் பிள்ளை

By

Published : Aug 25, 2022, 6:47 PM IST

சென்னை:சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தலைவர் பெருமாள் பிள்ளை, “மருத்துவக்கல்லூரிகளில் உள்ள பல்வேறு சிகிச்சைகளுக்கான துறைகளில் நியமிக்கக்கூடிய மருத்துவர்கள் அந்தந்த துறைகளில் மேற்படிப்பு படித்த மருத்துவர்கள் தான் அந்தந்த பதவிகளில் அமர வேண்டும். அவ்வாறு நியமித்தால் தான் அரசு மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய பொது மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்கும்.

ஆனால், கடந்த ஜூன் மாதம் நடைபெற்று முடிந்த கலந்தாய்வின் முடிவு வெளிப்படையாக நடைபெறவில்லை. இதன் காரணமாக தகுதி இல்லாத மருத்துவர்கள் சில இடங்களில் பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது 2019ஆம் ஆண்டில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் தங்களுடைய ஆட்சி அடுத்து அமையவிருக்கிறது.

செய்தியாளர்களைச் சந்தித்த பெருமாள் பிள்ளை

அப்போது உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என எங்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தற்போது முதலமைச்சரான பின்பும் எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடபட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி பெயரில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட அரசாணை 354-ஐ நிறைவேற்ற மறுத்து வருகிறார்.

மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அதையும் இந்த அரசு செவி சாய்த்து நிறைவேற்றுவதாக தெரியவில்லை. மேலும் அரசு மருத்துவர்களுக்குத் தற்போது கொடுக்கப்பட்டுள்ள பதவி உயர்வு சம்மந்தமாகவும் முறைகேடு நடந்துள்ளது.

மருத்துவக் கலந்தாய்வில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் செயலாளரிடம் புகார் கொடுத்தோம். அதையும் தற்போது வரை முறையாக விசாரணை செய்யவில்லை.

இப்படி தொடர்ந்து அரசு மருத்துவர்களுக்கு முறையாக கிடைக்கட வேண்டியவை கிடப்பில் போடப்படுகிறது. இதனைக் கண்டித்து சென்னையில் செப்டம்பர் 28ஆம் தேதி பாதிக்கப்பட்ட 22 அரசு மருத்துவர்கள் தங்களுடைய குடும்பத்துடன் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். மருத்துவர்களின் ஊதிய உயர்வால் பாதிக்கப்பட்டவர்களும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:வரும் 30ஆம் தேதியுடன் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி நிறுத்தம்...

ABOUT THE AUTHOR

...view details