சென்னை: ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் பல்வேறு சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டிலும் மொத்தம் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் 60 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் மணவாளநல்லூர் (விருத்தாசலம்)- சின்னசேலம் சாலையில் உள்ள சுங்கச்சாவடி மற்றும் நாகர்கோவில், காவல்கிணறு சாலையில் உள்ள சுங்கச்சாவடி ஆகிவற்றில் உள்ளூர் பிரச்சனைகள் காரணமாக சுங்கக்கட்டண வசூல் துவங்கப்படவில்லை.
விரிவாக்கப் பணிகள் காரணமாக ஸ்ரீபெரும்புதூர் - வாலாஜா சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் வருடாந்திர கட்டண உயர்வு அமலில் இல்லை. இது தவிர சமீபத்தில் திறக்கப்பட்ட வல்லம் (வேலூர்), எனம்கரியாண்டல் (திருவண்ணாமலை), தென்னமாதேவி (விழுப்புரம்) ஆகிய 3 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படாது.
மேற்குறிப்பிட்டவை தவிர தமிழ்நாட்டில் 53 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 24 சுங்கச்சாவடிகளில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி கட்டணம் உயர்த்தப்பட்டது. எனவே எஞ்சிய 29 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
உதாரணத்திற்கு திருப்பத்தூர் மாவட்டம் நெக்குந்தி சுங்கச்சாவடியில் கார், ஜீப்,வேன் உள்ளிட்ட லைட் வாகனங்களுக்கு வசூலித்து வந்த சுங்க கட்டணம் ரூ100க்கு பதிலாக 105 ரூபாயாக உயர்ந்துள்ளது. பேருந்து மற்றும் லாரிகளுக்கு ரூபாய் 335 க்கு பதிலாக ரூபாய் 355 ஆகவும், கனரக வாகனங்களுக்கு ருபாய் 525 இருந்ததை ரூ555 ஆகவும், ஓவர்சீஸ் வாகனங்களுக்கு ரூபாய் 640க்கு பதிலாக 675 என வசூலிக்கப்படும்.லோக்கல் பர்சனல் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் ரூபாய் 315 க்கு பதிலாக 330 என உயர்த்தப்பட்டுள்ளது.