கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆவடி அடுத்த பட்டாபிராமில் நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அனைத்து ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலுள்ள ஆயிரத்து 500 வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இளங்கோவன் தலைமையில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
25 கிலோ அரிசி, சக்கரை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமல்ராஜ், "தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் வழக்கறிஞர்களில் 90 விழுக்காடு பேர் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 19 மாவட்டங்களில் நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நீதிமன்றங்கள் திறக்கப்படாததால் வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றங்கள் திறக்கப்படாமல் வழக்கறிஞர்கள் பிரச்னை தீராது. நீதிமன்றம் திறக்கும் பட்சத்தில் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ள அனைத்து வழிகாட்டுதலையும் வழக்கறிஞர்கள் பின்பற்றுவார்கள்" என்றார்.
இதையும் படிங்க:இட ஒதுக்கீடு விவகாரம் - சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ வழக்கு