சென்னை:வருமான வரிச்சட்டம் பிரிவு 285 BA மற்றும் விதி 114 E ன்படி ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவடைந்ததும் ரூ.30 லட்சத்திற்கு மேற்பட்ட மதிப்பு கொண்ட விற்பனை ஆவணங்களைப் பொறுத்து விற்பவர், வாங்குபவர், ஆதார் எண், PAN எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற விவரங்கள் பதிவு அலுவலர்களால் வருமான வரித்துறை இணைய தளத்தில் மேலேற்றம் செய்யப்படுகிறது. இதற்கான படிவம், 61A என அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இவ்விவரங்கள் தவறாமல் மேலேற்றம் செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை மூலம் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ''விவரங்கள் வருடந்தோறும் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் அந்தந்த பதிவு அலுவலரால் வருமான வரித்துறை இணையதளத்தில் மேலேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்நிதியாண்டு முடிவடைந்த இரண்டு மாதத்திற்குள் எந்தெந்த சார்பதிவாளர்கள் இந்த அறிக்கையை மேலேற்றம் செய்தார்கள் என்ற விவரத்தை பதிவுத்துறை தலைவருக்கு தெரிவிக்கும் நடைமுறை வருமான வரித்துறையால் பின்பற்றப் படாதநிலையில் மேலேற்றம் செய்யப்படாத விவரங்கள் குறித்து, அவ்வப்போது வருமான வரித்துறையால் நினைவூட்டுகள் பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பப்படுவதும் அதன்மீது பதிவுத்துறை தலைவர் உரிய மேல் நடவடிக்கை எடுப்பதும் வழக்கத்தில் உள்ளது.
வருடாந்திர அறிக்கை மட்டுமல்லாது ரூ.30 லட்சத்திற்கு மேல் மதிப்பு கொண்ட விற்பனை ஆவணங்கள், ரூ.10 லட்சத்திற்கு மேல் மதிப்பு கொண்ட விற்பனை ஆவணங்கள் போன்றவற்றின் விவரங்களும் வருமான வரித்துறையினரால் பதிவுத்துறை தலைவரிடம் அவ்வப்போது கோரப்படும். இந்த விவரங்கள் மையக்கணினியில் இருந்து எடுக்கப்பட்டு வழங்கப்படும். இதன் மூலம் சார்பதிவாளர் மேலேற்றம் செய்த படிவம் 61A வில் ஏதேனும் விடுதல்கள் உள்ளதா என்ற விவரம் வருமான வரித்துறையால் சரிபார்க்கப்படும்.
இவ்வாறு மேலேற்றம் செய்ய தேவையான தகவல்களை ஆவணம் பதிவு செய்ய முன்பதிவு செய்யும் முன்பே ஆவணதாரர்களிடமிருந்து பெறும் வகையில் பதிவுத்துறையின் ஸ்டார் 2.0 மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனை ஆவணங்கள் பதிவிற்கு வரும் நிலையில் விற்பவர் மற்றும் வாங்குபவரிடமிருந்து PAN எண்ம் பெறப்படுகிறது. PAN எண் இல்லாதவர்கள் வருமானவரிச் சட்டத்தின்படி படிவம் 60 அளிக்கவேண்டும்.