சென்னை:எம்.ஆர்.சி.நகரில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அலுவலகத்தில், 126 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை, கரோனாவால் உயிரிழந்த முன்களப்பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 71 நபர்களுக்கு நிதியுதவி ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "சில இடங்களில் சொத்து வரி கட்டாமல் இருக்கிறார்கள். அனைவருக்கும் ஒரே மாதிரியான வரியை வசூலிக்கவும் முறையற்ற நிர்வாகத்தை முறைப்படுத்தவுமே சொத்து வரி உயர்வு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
10 முதல் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்துவது சரியாக இருக்காது என்பதற்காகவே, ஆண்டுதோறும் உயர்த்திக்கொள்ளும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்கள் தீட்டவும், உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான நிதித் தேவையை தாங்களே உருவாக்கிக்கொள்வதற்காகவுமே சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.