இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று (15.09.2022) சென்னை மண்டலத்திற்குட்பட்ட திருக்கோயில்களின் ரூ.20 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சுவாதீனம் பெறப்பட்டது.
சென்னை, கொத்தவால்சாவடி, அருள்மிகு ஆதிகேசவ பாஷ்யகார திருக்கோயிலுக்கு சொந்தமான 2000 சதுர அடி கட்டடம் வரதப்பிள்ளை என்பவருக்கு வணிகப் பயன்பாட்டிற்காக வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இவர் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமலும், உள்வாடகைக்கு விடப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது.
இதன் சந்தை மதிப்பு ரூ. 4 கோடி ஆகும் என தெரிவித்துள்ள இந்து சமய அறநிலையத்துறை அதேபோல், சென்னை, வில்லிவாக்கம், அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்து, வில்லிவாக்கம் ராஜா தெரு, ஆதி நாயுடு தெரு, மேற்கு மாடவீதி மற்றும் ரெட்டிதெருவில் 9852 சதுர அடியில் உள்ள மொத்தம் 24 கடைகள் உள்ளன. இவை வணிக பயன்பாட்டிற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தன. இதன் சந்தை மதிப்பு ரூ. 16 கோடி ஆகும்.
இந்த திருக்கோயில்களின் சொத்துக்களுக்கு நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்ததால் முறையே சென்னை மண்டலம் 1 மற்றும் சென்னை மண்டலம் 2 இணை ஆணையர்களால் சட்டப்பிரிவு 78-ன் உத்தரவின்படி இன்று சுவாதீனம் பெறப்பட்டது. இச்சொத்துக்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.20 கோடி ஆகும்” என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று சொல்கிறார்கள்.. ஆனால்... - இபிஎஸ் பேச்சு