இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமையானது என்றும், கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்றும், மதுரை அருகே உள்ள கீழடியில் நடத்தப்பட்ட நான்காவது கட்ட ஆய்வில் வெளிவந்திருப்பது; தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்கும் பெருமையான விஷயமாகும். தமிழர்களின் மிகத் தொன்மை வாய்ந்த எழுத்தறிவுக்கு மிக முக்கியமான வரலாற்றுச் சான்றும், தமிழர் நாகரிகம் பெரும் பழைமையான நாகரிகம் என்பதற்கு அசைக்க முடியாத சிறப்பான ஆதாரங்களும் கிடைத்திருப்பது; ஒவ்வொரு தமிழர் மனதிலும் பெருமித உணர்வு ஊற்றெடுத்துப் பொங்க வைத்துள்ளது.
இந்த அரிய தருணத்தில் கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், துறையின் முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் ஆகியோருக்கும், இந்த ஆய்வுப் பணியில் இரவு பகல் பாராது உழைத்த அனைவருக்கும், முதன்முதலில் இது குறித்து நாடு தழுவிய விழிப்புணர்வை ஏற்படுத்திய எழுத்தாளரும், தற்போதையை மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் சு.வெங்கடேசனுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கீழடி நான்காம் கட்ட ஆய்வில் கிடைத்த 5,820 அரும்பொருட்களின் தேர்ந்தெடுத்த மாதிரிகள், சர்வதேச ஆய்வகங்களுக்கும், தேசிய அளவிலான ஆய்வு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டு - அந்த ஆய்வகச் சோதனைகளின் அடிப்படையிலான முடிவுகள், தொல்லியல் அறிஞர்கள் குழுவால் சரி பார்க்கப்பட்டுள்ளது.அதன் விளைவாக, “கீழடி, வைகை நதிக்கரையில் சங்க கால நாகரிகம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்கது. இந்த ஆய்வின் முடிவுகளால், உலக நாகரிகங்களில் தமிழர் நாகரிகம் “முற்பட்ட நாகரிகம்” என்பதும், இந்திய வராலற்றை இனி தமிழ்நாட்டிலிருந்து பார்க்க வேண்டும் என்பதும் மீண்டும் உறுதியாகியிருக்கிறது.