சென்னை:வருவாய் அலுவலகர்கள் பதவி உயர்வு அரசாணை தொடர்பாக பாமக நிறுவனம் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் பதவி உயர்வில், பட்டப்படிப்பு படித்து பணியில் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கால் நூற்றாண்டுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை இப்போது செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் 200க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. இது அத்துறையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் வருவாய்த்துறைக்கு வருவாய் உதவியாளர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 2 தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அப்பணிக்கான அடிப்படை கல்வித் தகுதி பட்டப்படிப்பு ஆகும். அதே பணிக்கு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியுடன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 4 தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் இளநிலை உதவியாளர்கள், பதவி உயர்வின் மூலம் வருவாய் உதவியாளர்களாக வருகின்றனர். நேரடியாகவும், பதவி உயர்வின் மூலம் வருவாய் உதவியாளர்களாக வந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது பட்டப்படிப்பை தகுதியாகக் கொண்ட, தொகுதி 2 தேர்வுகளின் மூலம் நேரடியாக நியமிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப் பட வேண்டும் என்று கடந்த 1995ம் ஆண்டு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
அந்த ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் 2009ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டன. தமிழக அரசாணையை உடனடியாக செயல்படுத்தும்படி கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் மீண்டும் ஆணையிட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசாணை 1995ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் போது, இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்று மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ), வருவாய் கோட்ட அலுவலர் (ஆர்.டி.ஓ), வட்டாட்சியர் உள்ளிட்ட பதவிகளில் இருக்கும் பத்தாம் வகுப்பை கல்வித் தகுதியாகக் கொண்டு, தொகுதி 4 தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒரு நிலை பதவி இறக்கம் செய்யப்படுவார்கள்.
மாநிலம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இவ்வாறு பதவி இறக்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது.நேரடியாக வருவாய் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணை சரியானது, என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், அந்த ஆணையை 28 ஆண்டுகளுக்குப் பிறகு, 1995ம் ஆண்டு முதலே செயல்படுத்தும் போது, இரு வகையான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
முதலாவதாக, இடைப்பட்டக் காலத்தில் பதவி உயர்வு பெற்று உயர்பதவிக்கு சென்றவர்கள், மீண்டும் முந்தைய பணிக்கு பதவி இறக்கம் செய்யப்படும் போது, அது அவர்களை மனதளவில் கடுமையாக பாதிக்கும். அது அவர்களின் பணித்திறனையும் குறைக்கும். இரண்டாவதாக, மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்ட அலுவலர் ஆகியவை நிர்வாக நீதிபதி அதிகாரம் கொண்டவையாகும். இந்த பணிகளுக்கு பதவி உயர்வின் மூலம் வந்தவர்கள் நிர்வாகம் சார்ந்த பல வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியிருப்பார்கள்; பலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டிருப்பார்கள்.
தமிழ்நாடு அரசாணை செயல்படுத்தப்படும் போது, அவர்கள் எப்போது அந்த பணியில் அமர்த்தப்பட்டார்களோ, அந்த நாளில் இருந்தே அப்பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்பதால், அந்த பணியில் இருந்த போது அவர்கள் அளித்த தீர்ப்புகள், பிறப்பித்த ஆணைகள் என்னவாகும்? அவை செல்லுமா, செல்லாதா? என்பன உள்ளிட்ட குழப்பங்கள் ஏற்படும். அவை நிர்வாகத்தை பாதிக்கும்.
இத்தகைய சூழலில், இரு தரப்பிற்கும் பாதிப்பு ஏற்படாமல் சுமூகத் தீர்வு ஒன்றை தமிழக அரசு காண வேண்டும். 1995ம் ஆண்டின் அரசாணையை, அது பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து செயல்படுத்தாமல், அந்த ஆணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நாளில் இருந்து செயல்படுத்துவதே சுமூகத் தீர்வாக இருக்க முடியும். அவ்வாறு செய்யும் போது, இதுவரை பதவி உயர்வு பெற்ற தொகுதி 4 மூலம் தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் பதவி இறக்கம் செய்யப்படாமல் இப்போதுள்ள பதவிகளில் தொடர முடியும்.
கடந்த காலங்களில் அவர்கள் அளித்த தீர்ப்புகளும், பிறப்பித்த ஆணைகளும் தொடர்ந்து செல்லுபடியாகும். அதே நேரத்தில் பட்டப்படிப்பை தகுதியாகக் கொண்ட தொகுதி 2 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வருவாய் உதவியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, 1995ம் ஆண்டு அரசாணை அதே ஆண்டில் செயல்படுத்தப்பட்டிருந்தால் என்னென்ன பதவி உயர்வும், பணப்பயன்களும் கிடைத்திருக்குமோ, அவை அனைத்தையும் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மட்டும் 31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 வருவாய் கோட்ட அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதால் இதை செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது. இதன் மூலம் இரு தரப்பினரும் குறைகளின்றி செயல்படக் கூடும்; வருவாய்த்துறை பணிகளும் செம்மையாக நடைபெறும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பட்டு தேவானந்த் பதவியேற்பு!