சென்னை: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணியை இறுதிசெய்வதில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், பாஜகவிற்கு 22 இடங்கள் ஒதுக்க அதிமுக முடிவுசெய்துள்ளது.
ஆனால் பாஜக, மாவட்டத்திற்கு ஒரு இடம் வீதம் 40 தொகுதிகள் கேட்டுள்ளதால் கூட்டணியை இறுதிசெய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடவும் பாஜக முடிவுசெய்துள்ளது.
முன்னதாக தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, வி.கே. சிங், தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி, தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் உள்ளிட்டோர் நேற்று காலை முதலமைச்சரைச் சந்தித்து ஆலோசனை நடத்திய சூழலில், இன்று காலை சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதில் அதிமுகவுடனான தொகுதிப்பங்கீடு இறுதிசெய்வது குறித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமித் ஷா காரைக்கால், விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்டுச் சென்றார். மாலை விழுப்புரத்தில் நடைபெறும் பாஜக கூட்டத்திலும் அதிமுக சார்பில் முக்கியத் தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
முதலமைச்சரைச் சந்தித்த பாஜக தேர்தல் குழு தமிழ்நாட்டிற்கு வந்த அமித் ஷா கூட்டணி தொடர்பாக முதலமைச்சரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் அதிமுக தரப்பில் அவரை யாரையும் சந்திக்கவில்லை.
கடந்தமுறை சென்னை வந்த உள் துறை அமைச்சர் அமித் ஷாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே விமான நிலையம் சென்று வரவேற்ற நிலையில், கூட்டணி தொகுதி பங்கீடு நடைபெறும் இந்தச் சூழலில் வரவேற்காமல் இருப்பது பாஜகவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.