இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ ஒரு முதலமைச்சராக இத்தனை தீர்க்கத்துடனும், தீவிரத்துடனும் மு.க. ஸ்டாலின் முழுமூச்சுடன் களத்தில் இறங்கி காலத்தின் சவால்களை முறியடித்து நமிர்ந்து நிற்பார் என்று எதிர்க்கட்சியினர் மட்டுமன்று, அவர்களது சொந்தக் கட்சியினரே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஸ்டாலின் முதலமைச்சரானது பெரிய வரம்
ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக, விவசாயிகளின் ஒட்டுமொத்த பிரச்னைகளின் தீர்வுக்கான செயல் திட்டங்களுடன், இந்த அரசியல் இயந்திரக் கட்டமைப்புடன் கட்டி உருண்டு போராடிக் களைத்துப்போன எங்களைப் போன்றவர்களுக்குத்தான், இவரைப் போன்ற ஒருவர் முதலமைச்சராக வாய்த்தது எத்தனை பெரிய வரம் என்பதை முழுமையாக உணர முடியும்.
விவசாயத்தின் பிரச்னைகளுக்குத் தகவல் தொழில்நுட்பத்தின் துணையோடு தீர்வு காணும் வகையில், கிராமங்களின் அளவில் திட்ட மிடுதல் தொடங்கி விற்பனை வரையிலான செயல் திட்டம் ஒன்றை உருவாக்கி, அதனை அரசுடன் இணைந்து செயல்படுத்துவதற்காக கடந்த 20 ஆண்டுகளாக முயன்று வருகிறோம்.
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் திட்டம்
இத்திட்டம் 2009 காலக்கட்டத்தில் சோதனை முயற்சியாக, ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. திட்டத்தின் பலனை ஆய்வு செய்த மாநில, ஒன்றிய அரசின் உயர்நிலை அலுவலர்களின் கூட்டுக்குழு, இது இந்திய விவசாயத்தில் புதிய பரிமாணத்திற்கு வழிவகுக்கும் என்ற மதிப்புரையோடு, கடப்பா மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு நிதி ஒதுக்கி அனுமதி வழங்கியது.
ஆனால் 2009-10ஆம் ஆண்டுகளில் ஆந்திராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் இத்திட்டம் தொடங்கப்படவில்லை. எனினும், நாங்கள் மனம் தளராமல் தொடர்ந்து ஒன்றிய, மாநில அரசுகளிடம் முயற்சி செய்து வருகிறோம்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டம், வேப்பங்குளம் கிராமத்தில் மக்கள் ஈடுபாடு, நிதிப்பங்களிப்புடன் கிராம நீர்நிலைகளைச் செப்பனிட்டு, பயிர்மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் மூலம் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம்.
எங்களது நீண்ட பயணத்தில், அரசு இயந்திரம் செயல்படும் விதத்தை நேரடியாகக் காண்பதற்கும், அதிலுள்ள சாதக பாதக விளைவுகளின் தாக்கத்தை நேரடியாக எதிர்கொள்வதற்குமான வாய்ப்பு நிறையவே கிடைத்தது. அப்போதெல்லாம், நமது அரசு இயந்திரத்தின் செயல்பாடுகள் கடுமையான மனச்சோர்வை ஏற்படுத்தும்.
பிற நாடுகளில் மக்களின் உணர்வுகளுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்து மனம் ஏங்கும். தற்போது உள்ள நிலை நீடித்தால், நாட்டின், அடுத்த தலைமுறையினரின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சம் எங்களை ஆட்டுவிக்கும்.
நம்பிக்கை தந்த ஸ்டாலின்
இந்தச் சூழலில்தான், பிரதான எதிர்க்கட்சியின் தலைவராக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும், பல்வேறு வடிவங்களில் திட்டமிடப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.
அங்கு அவர் மக்களுடன் கலந்துரையாடிய விதம் மிக வித்தியாசமானதாக, நம்பிக்கை தரும் விதமாக இருந்தது. குறிப்பாக, கடந்த சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் அவர் மேற்கொண்ட 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற சுற்றுப்பயணத்தின் போதான மக்கள் சந்திப்பு நிகழ்வுகளில், 'உங்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி.
எனது அரசின் முதல் 100 நாள்கள் போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு மு.க.ஸ்டாலின் ஆகிய நான் பொறுப்பு - என்ற அவரது உறுதிமொழி நாட்டின் எதிர்காலம் குறித்து பெரும் அச்சத்திலும், குழப்பத்திலும் இருந்த தமிழ்நாட்டு மக்கள் மனதிற்குள் நம்பிக்கையைத் துளிர்விடச் செய்தது.
அந்த நம்பிக்கையின் கீற்று எனக்குள்ளும் ஊடுருவத் தவறவில்லை. விளைவு, எங்கள் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வில் கொண்டு போய், எங்களது விவசாயத் தீர்வுக்கான திட்டத்திற்கான கோரிக்கையை மனுவாகக் கொடுப்பது என முடிவு செய்தேன்.
பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளில் தலைவர்களிடம் கொடுக்கப்படும் மனுக்கள் எங்கே போகும் என்பதைப் பலமுறை நேரில் பார்த்தவன் என்பதால், அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. ஆனாலும், ஸ்டாலினின் உறுதி மிக்க சில முன்னெடுப்புகள், எனக்குள் அந்த நம்பிக்கையை ஏற்படுத்தின.
அந்த நம்பிக்கை தந்த ஊக்கத்தில் தான், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் முதல் டெல்லிப் பிரமுகர்கள் வரை சந்தித்தும், கொடுத்தும், எடுத்துச் சொல்லியும் எவரும் திரும்பிக் கூடப் பார்க்காத இந்தக் கோரிக்கையை, மாநில எதிர்க்கட்சி ஒன்றின் குறைகேட்புக்கான பெருந்திரள் கூட்டத்தில், பல்லாயிரக் கணக்கானோரில் ஒருவனாகச் சென்று கொடுக்கப்போனேன்.
மக்களை ஈர்த்த ஸ்டாலின்
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் காணப்பட்ட தீர்க்கமும், தீவிரமும், திடமான நகர்வுமே அரசியல் சார்பு ஏதுமற்ற எனக்குள் அத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்த பிறகு எனக்குள் பெருக்கெடுத்த உற்சாகம் சட்டென்று வற்றி விட்டது.
ஆயிரக் கணக்கில் திரண்டிருந்த மக்கள் மத்தியில், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை அளிக்கக் கூடிய உறுதிகளையும், செயல்திட்டங்களையும் தனது குரலில் உரத்து ஒலித்துக் கொண்டிருந்தார் ஸ்டாலின். ஏதோ ஒரு நம்பிக்கை மீண்டும் எனை உந்த, அவர்கள் அறிவித்திருந்த முறைப்படி எனது மனுவையும் கொடுத்துவிட்டு, ரசீதையும் பெற்றுக் கொண்டு திரும்பினேன்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்