சென்னை: கடலூரிலிருந்து புதுச்சேரியின் கிருமம்பாக்கம் இடையில், உரிய அனுமதியின்றி, 150-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், அந்த ஆட்டோக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரியைச் சேர்ந்த கிருபாநந்தன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, புதுச்சேரிக்கு இயக்கப்படும் ஆட்டோக்கள் தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் அனுமதி பெறுவதால், புதுச்சேரி அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி போக்குவரத்துத் துறை ஆணையர் தரப்பில், கரோனா நோயாளிகளை சில ஆட்டோக்களில் கொண்டு வந்ததைத் தவிர, வேறு எந்த விதிமீறலும் அரசின் கவனத்துக்கு வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இரு மாநில அரசுகளின் அனுமதி தேவை
இதையடுத்து, புதுச்சேரி போக்குவரத்துத் துறையின் அனுமதி தேவையில்லை என்ற போதும், கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் ஆட்டோக்கள் தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் அனுமதியை பெற்றிருப்பதை இரு மாநில போக்குவரத்துத் துறையும் உறுதி செய்ய வேண்டும் எனவும், அனுமதியின்றி இயக்கப்படும் ஆட்டோக்கள், அந்த வழித்தடத்தில் இயக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆட்டோக்கள் விதிமீறி இயக்கப்படுவது தொடர்பாக குறிப்பிட்டுப் புகார் அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அந்தப் புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அலுவர்களுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: சொல்லாமல் சென்றதற்கு மன்னியுங்கள் - தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உருக்கமான கடிதம்