சென்னை:தமிழ்நாட்டில்1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2022 செப்டம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் தொடங்கி வைத்தார். இந்த காலை உணவுத் திட்டம், முதல் கட்டமாக 1,937 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், வரும் கல்வியாண்டு (2023 - 2024) முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயன் அடையும் வகையில் விரிவுபடுத்துவத்ற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் விரிவுபடுத்தப்பட உள்ள இந்த திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் இளம்பகவத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரையிலும் பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுப்படுத்தப்படும் எனவும், இதற்கான 500 கோடி நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 14 லட்சத்து 21 ஆயிரத்து 873 குழந்தைகள் பயனடைவர். மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள் உணவை சமைத்து வழங்குவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஊராட்சி மன்றத் தலைவர், பேரூராட்சி நகர்மன்ற தலைவர், பள்ளித் தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் பிரதிநிதி, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உள்ளிட்ட குழு அமைக்கப்பட வேண்டும். அந்தப் பள்ளியில் உள்ள மதிய உணவு சமையற் கூடத்தை காலை உணவு சமைப்பதற்கான இடமாகவும் இறுதி செய்ய வேண்டும் அல்லது அந்த கிராமத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை ஒடுக்கீடு செய்ய வேண்டும்.