தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Aditya-L1: சூரியனில் இருந்து வரும் கதிர்களை தடுக்கும் வகையில் ஆதித்யா-L1 அமைப்பு - பேராசிரியர் ராஜகுரு தகவல் - L1 circuit

Aditya-L1: ஆதித்யா-L1 செயற்கைக்கோளானது சூரியனிலிருந்து வெளிவரும் புறஊதா கதிர்கள் மற்றும் சூரிய புயல்களைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என இந்திய வான் இயற்பியல் பேராசியர்கள் பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சியில் விளக்கம் அளித்தனர்.

aditiya l1
சூரியனில் இருந்து வரும் கதிர்களை தடுக்கும் வகையில் ஆதித்யா-L1

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 9:45 PM IST

ஆதித்யா எல் 1 குறித்து விளக்கம் அளித்த பேராசிரியர் ராஜகுரு

சென்னை:சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பி உள்ள ஆதித்யா-L1 செயற்கைக்கோள் குறித்து பள்ளி மாணவர்களின் கேள்விகளுக்கு இந்திய வான் இயற்பியல் துறை பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து ஆதித்யா-L1 செயற்கைக்கோள் அனுப்புவதில் பணியாற்றிய இந்திய வான் இயற்பியல் மையத்தின் பேராசிரியரும், விஞ்ஞானியுமான ராஜகுரு கூறுகையில், "ஆதித்யா-L1 செயற்கைக்கோள் சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் நேற்று (செப்.2) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது எனவும், இந்திய வான் இயற்பியல் மையத்திலிருந்து விஎல்சி என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதன் மூலம் சூரியன் குறித்துப் படிக்க முடியும் எனவும், சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள், கதிர்வீச்சுகள் சூரியனிலிருந்து வெளிவரும் புரோட்டான், எலக்ட்ரான் போன்ற பொருட்கள் குறித்தும் ஆதித்யா-L1 சுற்றுப்பாதையிலிருந்து ஆய்வு செய்ய உள்ளது என்றார்.

மேலும், பூமியிலிருந்து L1 பாதைக்கு நேரடியாகச் செல்வதற்குத் தேவையான பெரிய அளவில் ராக்கெட் இந்தியாவில் இல்லை. எனவே, பூமியின் சுற்று வட்டப் பாதையில் நான்கு, ஐந்து முறை சென்ற பின்னர் படிப்படியாக அதன் உயரம் அதிகரித்து L1 சுற்று வட்டப் பாதைக்கு ஆதித்யா செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் கொண்டு செல்ல உள்ளனர் என்றார்.

பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து மேல் நோக்கிச் சென்று L1 சுற்று வட்டப் பாதையை அடைய 120 நாட்கள் ஆகும் எனவும், இஸ்ரோவில் இருந்து முதல் முறையாக இதற்கு முயற்சி செய்துள்ளனர் என்றார். சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரக்கூடிய சூரிய கதிர்கள், சூரிய புயல்கள் போன்றவற்றை ஆய்வு செய்து செயற்கைக்கோள்களை அவற்றிலிருந்து பாதுகாக்க முடியும்.நாம் தினமும் பயன்படுத்தும் செல்போன்கள் உட்பட பல்வேறு தொடர்பு கொள்வதற்கான செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அவைகள் மீது எந்த வித பாதிப்பும் சூரிய கதிர்வீச்சுகளால் ஏற்படாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்றார்.

அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 1995ஆம் ஆண்டு L1 சுற்றுப்பாதையில் சூரிய கோளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக SOHO என்ற விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. அது தற்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனை விட நவீன தொழில்நுட்பத்தில் செயற்கைக்கோள் தயார் செய்து அனுப்பி உள்ளோம் எனவும், அதிலிருந்து வரும் தரவுகளின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட தகவல் குறித்துத் தெரிவிக்க முடியும் என்றார்.

இந்த செயற்கைக்கோள் மூலம் ஒரு நிமிடத்திற்கு ஒரு புகைப்படம் பெற முடியும். பத்து வினாடிக்கு ஒரு முறை கூட புகைப்படம் எடுக்க முடியும். ஆனால் புகைப்படங்களைச் சேமித்து வைப்பதற்கும் அதனைப் பதிவிறக்கம் செய்வதற்கும் போதுமான வசதிகள் இல்லாமல் உள்ளது. அதிக அளவில் புகைப்படங்களை எடுத்துச் சேமித்து வைப்பதால் செயற்கைக்கோளின் எடை கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஆதித்யா-L1 எடுத்து அனுப்பும் புகைப்படத்தைக் கொண்டு சூரியனை ஆய்வு செய்ய முடியும். மேலும், சுற்று வட்டப்பாதையில் செல்லும் பொழுது அதனை திசை மாறாமல் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவைக் கொண்டு இதன் ஐந்து ஆண்டுகள் எனவும், எரிபொருளின் தன்மையை பொருத்து செயற்கைக்கோள் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் என்றார்.

சந்திரயான்-3 செயற்கைக்கோள் நிலவில் இறக்கியது தான் சவால் ஆன செயல். இஸ்ரோ ஏற்கனவே நிறைய செயற்கைக்கோள்களை அனுப்பி உள்ளது. ஆனால் L1 சுற்று பாதையில் செயற்கைகோள் குறிப்பிட்ட ஆர்பிட்டில் தொடர்ந்து இயக்குவது என்பது தான் சற்று சவால் ஆனது. ஏற்கனவே, இஸ்ரோ பல்வேறு செயற்கைக்கோள்களை அனுப்பிய அனுபவம் உள்ளதால் இதுவும் பெரிதல்ல என தெரிவித்தார்.

மேலும், பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடும் போது, சூரிய புயல்கள் மூலம் செயற்கைக்கோள்களை அதில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கருவி கொண்டு பாதிப்புகள் ஏற்படாத வகையில் தடுக்க முடியும். மேலும் செயற்கைக்கோள்கள் அதுபோன்ற வெப்பங்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:சந்திரன், சூரியனை தொடர்ந்து கருந்துளை(Black hole) ஆராய்ச்சியில் இறங்கும் இஸ்ரோ!

ABOUT THE AUTHOR

...view details