சென்னை: ஒமைக்ரான் தொற்று குறித்து கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் மருத்துவத்துறை பேராசிரியர் பரந்தாமன் கூறும்போது, "தென் ஆப்ரிக்காவில் புதியதாக உருமாறிய ஒமைக்ரான் என்ற கரோனா வைரஸ் கண்டறியப்பட்டு, உலக சுகாதார மையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது இந்த உருமாறிய கரோனா வைரஸ் 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளதை கண்டறிந்தனர்.
ஏற்கெனவே உருமாறிய கரோனா வைரஸ் டெல்டா 17 முறை உருமாற்றம் அடைந்தது. ஆனால் ஒமைக்ரான் வைரஸ் 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளது. இதனால் வேகமாக பரவுகிறது. இந்த கரோனா வைரசும் பிற கரோனா வைரஸ் போன்றது தான். இதனால் பாதிப்புகள் அதிகளவில் இல்லாமல் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
ஒமைக்ரான் தொற்றின் அறிகுறிகள்
ஒமைக்ரான் கரோனா வைரஸ் அறிகுறிகளாக தொண்டை கரகரப்பு, உடல் வலி, உடல் சோர்வு போன்றவையுடன், லேசான வறட்டு இருமல் போன்றவை காணப்படும். காய்ச்சல் லேசாக இருக்கலாம். உடனடியாக அறிகுறிகள் தெரியாமல் இருப்பதால், சிலர் தீவிரம் அடைந்தப்பின்னர் தான் வருகின்றனர் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
அறிகுறிகள் லேசாக இருப்பதை கண்டறிந்த உடன், பரிசோதனை செய்துக் கொண்டு, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வைரஸ் நமக்கு வந்தாலும் மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்காக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி போட்டவர்களுக்கு வருமா?
ஒமைக்ரான் கரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு வந்தாக கண்டறியப்படவில்லை. எனவே அனைவரும் முழுவதுமான 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டும். கரோனா தொற்று வந்தவர்களுக்கு வரக்கூடிய பாதிப்புகள் அதிகளவில் கண்டறியப்படவில்லை. உலக சுகாதார அமைப்பு வீட்டில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் தகுந்த இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளதல் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் மூலம் தான் பரவுகிறது. எனவே முடிந்தவரையில் வெளி நாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும்.