தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 8, 2021, 4:53 PM IST

Updated : Jul 8, 2021, 5:47 PM IST

ETV Bharat / state

தமிழ்நாடு உயர்கல்வி மன்றம்: துணைத் தலைவராக அ.ராமசாமி நியமனம்!

ராமசாமி
ராமசாமி

16:49 July 08

சென்னை: தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றத்தைத் திருத்தியமைத்து, துணைத் தலைவராகப் பேராசிரியர் அ.ராமசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'மாநில அளவிலான உயர் கல்வித் திட்டங்களின் மேம்பாட்டிற்கும், மாநிலத் திட்டங்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டங்கள் போன்றவற்றை ஒருங்கிணைக்கவும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் தோற்றுவிக்கப்பட்டது.  

தற்போது பல்வேறு கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டப் படிப்புகளுக்கான பாடத்திட்டங்களை தலைப்பு வாரியாக ஆய்வு செய்து, இணைக் கல்வி குழுவின் முன்பு சமர்ப்பித்து, அதன் தீர்மானங்களை அரசுக்கு அனுப்பும் பணியையும் இம்மன்றம் செய்து வருகிறது.  

கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து இம்மன்றத்தின் துணைத்தலைவர் பதவி நிரப்பப்படாமலும், உயர் கல்வி மன்றம் திருத்தியமைக்கப்படாமலும் இருப்பதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றத்தைத் திருத்தியமைத்து உத்தரவிட்டுள்ளார்.

திருத்தியமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் தலைவராக உயர்கல்வித் துறை அமைச்சர், துணைத் தலைவராகப் பேராசிரியர் அ. ராமசாமி , உறுப்பினர் செயலராக பேராசிரியர் சு.கிருஷ்ணசாமி , பணி வழி உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ஆளுநரின் செயலாளர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், பல்கலைக் கழக மானியக் குழு செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஆகியோர் இடம் பெறுவர்.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் அ.ராமசாமி, அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றியவர் ஆவார்.  

இவர் அறிஞர் அண்ணா விருது, ராஜா சர்.அண்ணாமலை செட்டியார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர் ஆவார்.  மேலும், கடந்த 2006ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது, பேராசிரியர் அ.ராமசாமி இதே பதவியில் அமரவைத்து அழகு பார்த்தது குறிப்பிடத்தக்கது.  

இப்பதவியில் பேராசிரியர் அ.ராமசாமி, 2006 ஆகஸ்ட் 14 முதல் 2011 டிசம்பர் 9 வரை அரும்பணியாற்றியிருக்கிறார். அதே போன்று, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ள சு. கிருஷ்ணசாமி, 33 ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில் இணைப் பேராசிரியராக வரலாற்றுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  

இவர் தேசிய ஆலோசனைக்குழு, ஐக்கிய நாடுகள் வளர்ச்சிக் திட்டக்குழு, உலக சுற்றுச்சூழல் ஆய்வுக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் உறுப்பினராகப் பொறுப்பு வகித்ததோடு, தமிழ் நாடு அரசின் “நல்லாசிரியர் விருது’’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே:திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் ராமசாமி: அவர் யார் தெரியுமா?

Last Updated : Jul 8, 2021, 5:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details