தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான தடுப்பூசி மருந்து சென்னை கிண்டியிலும், நீலகிரி குன்னூரிலும் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த இரு ஆய்வகங்களிலும் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லை என மத்திய அரசு 2008ஆம் ஆண்டு உரிமங்களை ரத்து செய்தது.
அதனால் சென்னை கிண்டி பிசிஜி தடுப்பு மருந்து ஆய்வகத்தில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர் தடுப்பூசி மருந்து தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டன.
அதைத்தொடர்ந்து கிண்டி தடுப்பூசி ஆய்வகத்தில் குழந்தைகளுக்கான காசநோய் தடுப்பு ஊசி தயார் செய்ய உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் நான்கு லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதுகுறித்து பிசிஜி தடுப்பு மருந்து ஆய்வக ஆலோசகர் சேகர் ஈடிவி பாரத் தமிழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி அளித்தார்.
அதில் அவர், "1948ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி கிண்டியில் நிறுவப்பட்ட பிசிஜி தடுப்பு மருந்து ஆய்வகம் மத்திய அரசின் பொது சுகாதார சேவை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. முதலில் இங்கு குழந்தைகளுக்கான காசநோய் தடுப்பு மருந்து பிசிஜி தயாரிக்கப்பட்டது.