சென்னை:தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் மற்ற மாநிலங்களை விட ஏராளமான படங்களைத் தயாரித்து வருகிறது. இங்கு முன்னணி நடிகர்கள் என்று 15 பேர் வரை உள்ளனர். அவர்களது படங்களுக்கு மட்டுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்பது அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் சமீப காலமாகவே தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்புத் தராத நடிகர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் பலமுறை தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதில், நடிகர் சிம்பு, விஷால், எஸ்ஜே சூர்யா, யோகிபாபு, அதர்வா உள்ளிட்ட நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 01) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர்கள் சங்கத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதில், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. நடிகர்கள் பலரும் குறிப்பிட்ட தேதிக்கு படப்பிடிப்புக்கு வருவதில்லை. படத்தில் நடிப்பதாக முன்பணம் வாங்கி விட்டு, அதன்பிறகு அப்படத்திற்கு முறையான கால்ஷீட் தருவதில்லை எனப் பல்வேறு புகார்கள் வைக்கப்பட்டன. மேலும், ஏற்கனவே கூறிய நடிகர்கள் மட்டுமல்லாமல் நடிகர் தனுஷ் உள்பட 14 நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.