சென்னை:ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தின் மோசடி விவகாரத்தில் தொடர்புடைய பாஜக நிர்வாகியும் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ், 15 கோடி ரூபாய் அளவில் பணம் மோசடி செய்தது விசாரணையில் அம்பலமானது. வழக்கிலிருந்து காப்பாற்றுவதாக கூறி இவ்வழக்கின் முக்கிய தரகரான ரூசோ என்பவரிடமிருந்து பணத்தை பெற்றதும் விசாரணையில் உறுதியாகி உள்ளது.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி தொடர்பான குற்றப்பத்திரிக்கையில், ஆர்.கே சுரேஷ் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் திருச்சியை மையமாகக் கொண்டு செயல்பட்ட எல்பின் நிதி நிறுவன மோசடியிலும் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ்க்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் வெளிநாட்டிற்கு தப்பி சென்று தலைமறைவாக இருக்கும் ஆர்.கே சுரேஷை பிடிப்பதற்காக லுக் அவுட் (look out) நோட்டீஸ் ஒன்றை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிறப்பித்துள்ளனர். இந்நிலையில் எல்பின் நிதி நிறுவன மோசடியில் தொடர்பு இருப்பதாக நேற்று செய்தி வெளியானதை அடுத்து. இன்று தனது ட்விட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் நாகப்பாம்பின் புகைப்படத்தை பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.