சென்னை:மகாநதி, 16 வயதினிலே ஆகிய திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ராஜ்கண்ணு இன்று தன் வாடகை வீட்டில் காலமானார்.
70களில் இருந்து தற்போது வரை திரையுலகில் நீடித்து நிற்கும் படங்களின் பட்டியலில் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘16 வயதினிலே’ படம் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது. அந்த காலத்திலேயே தமிழ்நாட்டின் பல திரையரங்குகளில் இப்படம் 100 நாட்கள் ஓடி அனைவரது பாரட்டுகளையும் குவித்தது.
1977-இல் பாரதிராஜாவை இப்படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தவர், தயாரிப்பாளர் ராஜ்கண்ணு (78) . அப்படம் பாரதிராஜாவுக்கு மட்டுமின்றி அதில் நடித்த ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கமல்ஹாசன் ஆகியோருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து ராஜ்கண்ணு ‘கிழக்கே போகும் ரயில்’, ‘கன்னிப்பருவத்திலேயே’, ‘வாலிபமே வா’ ,’பொண்ணு பிடிச்சிருக்கு’ , ‘எங்க சின்ன ராசா’ மற்றும் கமல்ஹாசனின் ‘மகாநதி’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் ‘அர்த்தங்கள் ஆயிரம்’ என்ற திரைப்படத்தை தயாரித்து அதை இயக்கியும் உள்ளார்.
இந்த நிலையில், இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று (ஜூலை 12) அதிகாலை சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள தன் வாடகை வீட்டில் உயிரிழந்தார். இவர் இறந்த செய்தி திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் காலமான செய்தியை கேட்டு திரைத்துரையினர் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் பாரதிராஜா தன் ட்விட்டர் பக்கத்தில், “16 வயதினிலே படத்தின் வாயிலாக என்னை இயக்குநராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற என் முதலாளி ராஜ்கண்ணு. அவர்களின் மறைவு பேரதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும், என் குடும்பத்திற்கு பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில். “நான் அறிமுகமான கிழக்கே போகும் ரயில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு, என்னுடைய திரையுலகப் பயணத்தில் பெரும் பங்கு வகித்தவர். அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார்.
முன்னாள் சென்னை எம் பி ராசேந்திரன் நேரில் வந்து மறைந்த தயாரிப்பாளர் ராஜ்கண்ணுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்த திரையுலகினர் தங்கள் வீட்டிற்கு வருவார்கள் என நினைத்த நிலையில் யாரும் வராதது வேதனை அளிப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: DMK councillor suicide: ராசிபுரத்தில் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை!