சென்னை:நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'கோச்சடையான்' திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகருக்கும், அபிர் சந்த் நாகர் என்பவருக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு, ரூ.10 கோடியை அபிர் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் திரைப்பட உரிமையை வேறு யாருக்கேனும் கைமாறும் பட்சத்தில், அந்த தொகையில் 20 சதவீதமும், லாபத்தில் பங்கும் வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி அபிருக்கு கொடுக்க வேண்டிய தொகை 5 கோடி ரூபாய்க்கு கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி முரளி மனோகர் வழங்கியுள்ளார். ஆனால் அவர் வழங்கிய காசோலை, அவரது வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பிவந்துள்ளது.
அதனால் காசோலை மோசடி தொடர்பாக முரளி மனோகருக்கு எதிராக அபிர் சந்த் நாகர் மாற்றுமுறை ஆவண சட்டத்தின் கீழ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை விரைவு நீதிமன்றம், முரளி மனோகருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி தீர்ப்பளித்தது.