நடிகர் ரஜினிகாந்த் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஜூலை 12 ஆம் தேதி சென்னையில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வருவார் என மிகுந்த எதிர்பார்புடன் இருந்தனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மக்கள் மன்றத்தைக் கலைத்து, மீண்டும் ரசிகர் மன்றமாக மாற்றி அறிவித்தார். அதோடு வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.
இதையடுத்து பிரபல தயாரிப்பாளர் 'ஜென்டில்மேன் ' K.T.குஞ்சுமோன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், "மக்கள் மன்றம் கலைப்பு, அரசியலுக்கு முழுக்கு என ரஜினிகாந்தின் அறிவிப்பு அவரது ரசிகர்களில் ஒருவரான எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த அறிவிப்பு உலகமெங்கும் வாழும் அவரது ரசிகர்களை மகிழச் செய்திருக்கும் என்பது நிச்சயம்".
வருடத்திற்கு இரண்டு படங்கள்
"சூப்பர் ஸ்டாரின் முடிவு, தெளிவான சிந்தனை, வருடத்திற்கு இரண்டு படங்களாவது தொடர்ந்து வெளிவந்தால்தான் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும், பல்லாயிரக் கணக்கான சினிமா தொழிலாளர்களும், ரசிகர்களும் மகிழ்வார்கள். சினிமா செழிக்கும், வியாபாரம் சிறக்கும்.அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கரோனா பாதிப்பால் சினிமா தொழில் சிதைந்து கிடக்கிறது. இந்த தருணத்தில் அவரது சரியான முடிவு திரையுலகினரின் மனங்களில் தேனை வார்க்கிறது".