தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தயாரிப்பாளர் சங்க வங்கிக் கணக்கு வழக்கு: சிறப்பு அலுவலர் பதிலளிக்க உத்தரவு - தயாரிப்பாளர் சங்கம்

சென்னை: தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வங்கிக் கணக்கை நிர்வகிக்க தேர்தல் அலுவலருக்கு அனுமதியளிக்கக் கோரிய மனுவுக்கு, தயாரிப்பாளர்கள் சங்க சிறப்பு அலுவலர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Jul 3, 2020, 9:16 PM IST

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை தேர்தல் அலுவலராக நியமித்து, தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி தயாரிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி எம். ஜெய்சந்திரனை, தேர்தல் அலுவலராக நியமித்து தேர்லை ஜூலை மாதத்திற்குள் நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது.

கரோனா ஊரடங்கு காரணமாக இந்த காலக்கெடு செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க நல அறக்கட்டளை சார்பில் தயாரிப்பாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டும் செய்யப்பட்டுள்ளது.

தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரீமியம் தொகையை செலுத்தவில்லை எனவும், கரோனா பரவி வரும் நிலையில், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரீமியம் செலுத்துவது உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை செயல்படுத்த, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வங்கிக் கணக்கை நிர்வகிக்க தேர்தல் அலுவலருக்கு அனுமதியளிக்க கோரி தயாரிப்பாளர்கள் சோலையன், குருசங்கர், ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதில், தயாரிப்பாளர்கள் நல அறக்கட்டளையில், தயாரிப்பாளர்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் தொகையை காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும், உறுப்பினர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, இந்த மனு தாக்கலுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனவும், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தயாரிப்பாளர்கள் சங்க சிறப்பு அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி சிறப்பு அலுவலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details