தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மாற்றுத்திறனாளிகளுக்காக ஏப்ரல் முதல் 442 தாழ்தளப் பேருந்துகள்" - நீதிமன்றத்தில் அரசு தகவல்! - தாழ்தள பேருந்துகள் தொடர்பான வழக்கு

மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் 442 தாழ்தளப் பேருந்துகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

Procure
Procure

By

Published : Jan 9, 2023, 9:19 PM IST

சென்னை: கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என கடந்த 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டப்படி, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி, வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் 442 பேருந்துகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும், இவற்றில் சென்னையில் 242 பேருந்துகளும், மதுரை மற்றும் கோவையில் தலா 100 பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னை, மதுரை மற்றும் கோவை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகள் சரி செய்யப்பட்டு வருவதாகவும், தற்போது மாற்றுத்திறனாளிகள் அணுகக் கூடிய வகையில் முழுமையாக பேருந்துகள் இயங்க முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் மட்டும் 37.4 சதவீதப் பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் தயார் செய்யப்பட உள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்துகளில் 40 சதவீத பேருந்துகள் மட்டுமே தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பேருந்துகள் சாதாரண பொதுமக்களுக்கான பேருந்துகளாக கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தாழ்தளப் பேருந்துகள் என்பது மாற்றுதிறனாளிகளுக்கானது எனக் கூறுவது தவறானது என்றும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பேருந்தில் ஏறுவது இன்றளவும் சவாலாக உள்ளதென தெரிவித்தார். மேலும், கொள்முதல் செய்யக்கூடிய பேருந்துகளில் நூறு சதவீதப் பேருந்துகளையும் தாழ்தள பேருந்துகளாக ஏன் மாற்றியமைக்க கூடாது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், பல்வேறு தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளதால் 100 சதவீதம் தாழ்தளப் பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாது எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, என்னென்ன தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு 55 மறுவாழ்வு மையங்கள் - உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details