சென்னை:மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியில் துர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதில் இரு குழுக்களிடையே பிரச்சினை ஏற்பட்டதால் காவல்துறை கும்பாபிஷேகப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளது.
கும்பாபிஷேகத்தில் மோசடி
நொச்சிக்குப்பம் பகுதியில் கலங்கரை விளக்கம் அருகே நகர்புற மேம்பாட்டு குடியிருப்புகள் உள்ளன. இதில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஒரு குழுவினர் பணம் வசூல் செய்து பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.
இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு குழுவினர், ஊர் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் கும்பாபிஷேகப் பணிகளை நடத்துவதாக கூறி மயிலை நொச்சிக்குப்பம் மீனவர் கிராம சபையைச் சேர்ந்தவர்கள் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அப்பகுதியில் மேலும் இரண்டு கோயில்கள் இருக்கும்போது, துர்க்கை அம்மன் கோயிலுக்கு மட்டும் முறையாக ஊர் மக்களிடம் கருத்து கேட்காமல் பணம் வசூல் செய்து மோசடி செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
துர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் : இரு தரப்பினர் மோதலால் நிறுத்தப்பட்டது இருதரப்பினர் இடையே மோதல்
மேலும், பேச்சுவார்த்தைக்காக சென்ற நபர்களிடமும் மிரட்டல் விடுவதாக புகாரில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மெரினா காவல் துறையினர் கோயில் கும்பாபிஷேகப் பணியை நிறுத்தி வைத்தனர். முழு ஊரடங்கு இருப்பதாலும், கரோனா பரவல் காரணமாக உரிய அனுமதி இல்லாமல் கும்பாபிஷேகம் பணி நடப்பதாலும் காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் கோயில் கும்பாபிஷேக விவகாரம் தொடர்பாக இரு தரப்பு குழுவினரும் மெரினா காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பு குழுவினர் இடையே காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த சம்மன் அனுப்பி அழைப்பு விடுத்துள்ளனர்.
பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:முதுபெரும் தொல்லியல் ஆய்வாளர் இரா.நாகசாமி காலமானார்