சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட முதலீடுகளுக்கு மாத வட்டியாக 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படும் என்று சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 2438 கோடி முதலீடு பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு முக்கிய முகவர்கள் என மொத்தம் 21 பேரைக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு இதில் இயக்குநர்கள் பாஸ்கர் ,மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜ், மற்றும் பேச்சிமுத்து ராஜா, அய்யப்பன், உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் .
இவ்வழக்கில் இதுவரை ரொக்கமாக 5.69 கோடியும், தங்கம் வெள்ளி பொருட்கள் 1.13 கோடி மதிப்பு கைப்பற்றி உள்ளனர். மேலும் வங்கி கணக்கிலிருந்த பணம் 96 கோடி முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. அவர்களுடைய அசையா சொத்துகள் 97 கண்டறியப்பட்டு உள்ளது. இந்நிலையில் முன்னாள் பாஜக நிர்வாகி ஹரிஷை 4 நாள் காவலில் எடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரூசோ என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும் முன்னாள் பாஜக நிர்வாகி ஹரிஷிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும் பிரபல நடிகரும் தயாரிப்பாளரும் வினியோகஸ்தருமான ஆர்.கே சுரேஷுக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகி இருக்கிறது.
குறிப்பாக ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ராஜசேகர் மற்றும் கைதான ரூசோ ஆகியோரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் ஆர் கே சுரேஷுடன் பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.