சென்னை:திமுக மகளிர் அணி சார்பில் "மகளிர் உரிமை மாநாடு" சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ (YMCA) மைதானத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழகம் வந்தனர். 5 ஆண்டுகளுக்குப் பின்னர் சோனியா காந்தி, தமிழ்நாட்டிற்கு இந்த மாநாட்டிற்காக வருகை தந்துள்ளார்.
நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிரியங்கா காந்தி பேசுகையில், "32 ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்க்கையில் இருண்ட நாள் அது. அப்படிப்பட்ட ஒரு நாளில் தான், நான் முதன் முதலில் தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைத்தேன். என் தந்தையின் சிதைந்த உடம்பை எடுத்து செல்வதற்காக. எனக்கு அப்போது 19 வயது. நான் இப்போது இருக்கும் வயதை விட, அப்போது என் அம்மாவிற்கு வயது குறைவு தான்.
அன்றைய இரவு, நான் மிகவும் வேதனை அடைந்து இருந்தேன். மீனம்பாக்கம் வந்த போது, பாதுகாப்பு படையினர் வந்தார்கள். அப்போது, விமான நிலையத்தில் வேலை செய்யும் பெண்கள் அனைவரும், என் அம்மாவிடம் வந்து அழுதார்கள். அவர்கள் என் தந்தைக்காக கண்ணீர் விட்டது, இன்றளவிலும் என் மனதில் நீங்காமல் இருக்கிறது.
நீங்கள் தான் என் தாய், என் சகோதரி. உங்களுடன் நான் இங்கே இருப்பதை பெருமையாக கருதுகிறேன். நான் நம் மண்னை பற்றியும், இந்திய நாட்டின் பெண்களை பற்றியும் பேச போகிறேன். சமூக மாற்றம் இங்கு தான் உருவாகியது. நம் இந்தியாவில் தான். குறிப்பாக தமிழகத்தில், பெரியார் வழியில், அண்ணாதுரையும், கருணாநிதியும் ஆட்சி செய்தனர். இன்னும் சமத்துவத்தை பெண்கள் பெற முடியாதா நிலை தான் இருக்கிறது.
நாம் முழுமையான உன்னதமான சமத்துவத்தை பெற இன்னும் உழைத்தாக வேண்டும். 100 ஆண்டுகளுக்கு முன் பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தை தந்தை பெரியார் எழுதினார். ஆனால் நூறு ஆண்டுகளுக்கு பிறகு, இப்போதும் பெண் ஏன் அடிமையாய் இருக்கிறாள் என்றே கேட்கும் நிலை உள்ளது.
மாற்றத்திற்கான சரியான தளத்தில் இப்போது நாம் இருக்கிறோம். பல தலைமுறைகளாக நீடிக்கும் அடக்குமுறைகளில் இருந்து விடுபட பெண்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்தியாவில் பெண்கள் எந்த நிலையில் இருந்தாலும், அவர்களின் மீது தொடர்ந்து அடக்குமுறையானது தொடர்ந்து வருகிறது. சமூக மாற்றத்துக்கான புரட்சி, தமிழ்நாட்டில் தான் உருவானது. இந்திய அரசியலில், பெண்களுக்கான முக்கியத்துவத்தை அதிகபடுத்த வேண்டியது அவசியமான ஒன்றாக இருக்கிறது" என்று பிரியங்கா காந்தி பேசினார்.
இதையும் படிங்க:"எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் போ என்றால்.. சட்டமன்றம்.. பாராளுமன்றம் எதற்கு?" - சீமான் ஆவேசம்!